மிட்டாய்க்கு பதில் கடலைமிட்டாய்! குடியரசுத் தினவிழாவில் மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

குடியரசு தினமான இன்று, தொடக்கப் பள்ளி ஒன்றில் மாணவ, மாணவிகளுக்கு சாக்லேட் டுக்குப் பதிலாக கடலை மிட்டாய் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ளதுஉருவம்பட்டி கிராமம்.இந்த ஊரில் இருக்கும் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளும் ஆசிரியர்களும் அடிக்கடி ஏதாவது புதிய முயற்சிகளையும் வித்தியாசமான செயல்களையும் செய்து ஒட்டுமொத்த மாவட்டத்தின் கவனத்தையும் ஈர்த்து விடுகிறார்கள். இதுகுறித்து செய்திகள் ஏற்கனவே நமது இணையத்திலும் வெளியிட்டிருக்கிறோம்.இந்தநிலையில்,இன்றும் அப்படியொரு நிகழ்வு அந்தப் பள்ளியில் நடந்தது. வழக்கமாக குடியரசு, சுதந்திர தின விழாக்களில் தேசியக்கொடி ஏற்றி முடித்ததும் பள்ளிப் பிள்ளைகளுக்கு சாக்லேட் கொடுப்பதுதான் வழக்கம். ஆனால், இந்தப் பள்ளியில் இன்று எல்லாருக்கும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டிருக்கிறது. பிள்ளைகளுக்கு அந்த மிட்டாய் குறித்த விழிப்பு உணர்வை தரும் விதமாகவும் விளக்கமும் தரப்பட்டது.

தொடக்க நிகழ்வாக விழாவில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோவிந்தராசு பேசினார். "ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும் சிறப்பாக கருதப்படும் சில நாள்கள் உள்ளன. நம் நாட்டில் ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசு தினவிழா கொண்டாட்டமும் அப்படிப்பட்ட ஒன்று. நம் நாடு 1947இல் சுதந்திரம் பெற்றாலும் குடியரசானது 1950-வது வருடத்தில்தான். இந்த நாளில் தான் சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச்சட்டம் முதன் முதலில் நடைமுறைக்கு வந்தது. மேலும், இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட ஜனநாயக மற்றும் குடியரசு நாடு என பிரகடனம் செய்யப்பட்டது' என்றார்.

பின்னர் உருவம்பட்டி  பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் கருப்பையா மாணவர்களுக்கு கடலை மிட்டாய் வழங்கிவிட்டு, குழந்தைகளுக்குப் புரியும்படி அதுபற்றியே பேசினார். "கரும்புச்சாறில் இருந்து கிடைக்கும் வெல்லத்தையும் வேர்க்கடலையும் சேர்த்து தயாரிக்கப்படுவது கடலைமிட்டாய். வேர்க்கடலையில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. வாந்தி, உடல்சோர்வு, மன அழுத்தம் போன்றவற்றை போக்க உதவுகின்றன. வெல்லத்தில் உள்ள இரும்புச் சத்து ரத்த சோகையைத் தவிர்க்க உதவும். செரிமானத்தை மேம்படுத்தும். சில மாணவர்கள்  எந்த நேரத்திலும் சாக்லேட் தின்று கொண்டிருப்பார்கள். பசிக்கிற நேரத்தில் சாக்லேட் தின்பண்டங்களை தின்று வயிற்றை நிரப்பிக் கொள்ளும் மாணவர்களால் அவர்களுக்கு தேவைப்படும் சத்துள்ள காய்கறி, கீரை, பழம் போன்ற உணவு வகைகளை சாப்பிட முடியாது. இதுபோன்ற  உணவுப் பழக்கம்தான் நாளடைவில் உணவு மெலிவுக்கு காரணமாக இருக்கிறது. அந்த பழக்கத்திலிருந்து குழந்தைகள் மாறவேண்டும். அதற்காக, நம் பள்ளிப் பிள்ளைகளுக்கு உடனடியாக ஊட்டச்சத்தைத் தரக் கூடிய நம் பாரம்பர்ய கடலை மிட்டாய்களை இன்று வழங்கி இருக்கிறோம். இதனை நம் பள்ளியில் நடக்கும் இந்தக் குடியரசு தினவிழாவில் அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

முன்னதாக நடைபெற்ற பேச்சுப்போட்டி, விளையாட்டுப் போட்டி, பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில்  சென்னை சிறுதுளி அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட விதைப் பென்சில்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது...விழாவில் ஏராளமான ஊர்ப்பொதுமக்கள் கலந்து கொண்டு ஆரோக்யமான மாணவர் சமுதாயத்தை உருவாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!