''ராகதேவன் இளையராஜாவால் விருதுக்குத்தான் கௌரவம்!'' - சிவக்குமார் புகழாரம்

பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டவுடன் இளையராஜாவுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. முன்னதாக கமல், ரஜினி, வைரமுத்து, நாசர் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர். அவர்களைத் தொடர்ந்து மூத்த நடிகர் சிவக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிவக்குமார் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

சிவக்குமார் | இளையராஜா

இதுதொடர்பாக சிவக்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "பாரத ரத்னாவுக்கு அடுத்த பெரிய விருது பத்மவிபூஷண். 68 ஆண்டுகளில் 100 பேர் இந்த விருது வாங்கியிருந்தால் அதிகம். ராகதேவன் இளையராஜாவுக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இல்லை. அந்த விருதுக்கு ராஜாவால் கௌரவம் கிடைத்துள்ளது. பஞ்சு அருணாசலம் அவர்களால் 'அன்னக்கிளி'- படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்குக் கிடைத்த புதையல் அவர். அப்படத்தின் கதாநாயகனாக நான் நடித்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன். 50-க்கும் மேற்பட்ட எனது படங்களுக்கு இசையமைத்து படங்களின் வெற்றிக்கு ஆணிவேராக இருந்திருக்கிறார். எனது 100-வது படம் 'ரோசாப்பூரவிக்கைக்காரி '-' சிந்துபைரவி ' படங்களின் வெற்றியில் பெரும் பங்கு அவருடையது. தன் வாழ்நாளை இசைக்காகவே அர்ப்பணித்த அபூர்வ கலைஞர். அவரால் கலையுலகமும் தமிழகமும் இந்த விருது மூலம் கௌரவிக்கப்பட்டிருக்கிறது. எத்தனை விருதுகள் கொடுத்தாலும் அவர் இசையுலகில் சாதித்ததற்கு அவை ஈடாக முடியாது. வாழ்க இசைஞானி .ஓங்குக அவர் புகழ்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!