திறந்தநிலையில் கழிவறைத் தொட்டி! அபாயத்தில் அங்கன்வாடிக் குழந்தைகள்

 ''அங்கன்வாடி மையத்தின் வாசல் அருகே உள்ள கழிவறைத் தொட்டி திறந்த நிலையில் கிடப்பதால்,அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு சுகாதாரக் கேடும், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களும் பரவும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது' என்று குழந்தைகளின் பெற்றோர்கள் அலறுகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர்கள், "கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் சிந்தலவாடி ஊராட்சியில் உள்ள மேல சிந்தலவாடி அங்கன்வாடி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த அங்கன்வாடி மையத்தின் வாசல் அருகே உள்ள கழிவறைத் தொட்டி திறந்த நிலையில் உள்ளது. இதனால், அந்தப் பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவறைத் தொட்டி திறந்தநிலையில் இருப்பதால், அங்கே உற்பத்தியாகும் கொசுக்கள், குழந்தைகளைக் கடிக்கிறது. இதனால்,டெங்கு பரவும் அபாயம் உள்ளது.

அந்த தொட்டியின் மேல் உள்ள கான்க்ரீட் தடுப்புகள் வலுவிழந்து காணப்படுகின்றன. இதனால், அந்த பகுதியில் நடமாடும் குழந்தைகள் கழிவறைத் தொட்டிக்குள் விழம் அபாயம் இருக்கிறது. அங்கன்வாடி டீச்சர் அசந்த நேரத்தில்,குழந்தைகள் அந்த தொட்டிக்குள் விழ வாய்ப்பிருக்கு. ஊராட்சி நிர்வாகியிடம்,'உடனே இந்த கழிவறை தொட்டியை மூடுங்க' என்று பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நலன்கருதி கழிவறைத் தொட்டியை பராமரித்து, அத மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மக்களை ஒன்றுதிரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்" என்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!