டி.ஆர்.ஓவுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தனியார் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸை ஓட்டிய டிரைவர்! | 108 Ambulance driver suspended in Karur

வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (27/01/2018)

கடைசி தொடர்பு:15:59 (23/07/2018)

டி.ஆர்.ஓவுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தனியார் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸை ஓட்டிய டிரைவர்!

 

 டி.ஆர்.ஓ. சூர்யபிரகாஷ்

 

அரசின் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையால் ஏழை, எளிய மக்கள் முதல், விபத்து காலத்தில் உயிருக்குப் போராடுபவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் பயனடைந்து வருகின்றனர். விபத்து,தற்கொலை முயற்சி, இயற்கையாக நோய்வாய்ப்பட்டு அவதியுறும் மக்கள் என எல்லாவகையிலும் குக்குராமங்களில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் எண்ணற்ற உயிர்களை 108 ஆம்புலன்ஸ் சேவை காப்பாற்றி இருக்கிறது.

ஆனால்,'அந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் விபத்துகளில் அடிப்பட்டு கிடப்பவர்களை அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்காமல், கமிஷனுக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு போகிறார்கள்' என்ற குற்றச்சாட்டுகள் அவ்வபோது எழும். அதுபோன்ற ஒரு சம்பவம்தான் கரூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷை ஏமாற்றிவிட்டு, தனியார் மருத்துவமனைக்கு விபத்தில் சிக்கிய வாலிபரை கொண்டு சேர்த்த டிரைவர் மீது டி.ஆர்.ஓ நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

கரூர் மாவட்ட வருவார் அலுவலராக சூர்யபிரகாஷ் பணியாற்றி வருகிறார். இவர் அலுவல் வேலையாக அரவக்குறிச்சி சாலையில் பயணித்திருக்கிறார். அப்போது, டூவீலரில் சென்ற ஒரு இளைஞரை அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றிருக்கிறது. அதைபார்த்ததும் பதறிப்போன டி.ஆர்.ஓ. சூர்யபிரகாஷ், உடலில் பலத்த காயம்பட்ட நிலையில் கிடந்த அந்த இளைஞரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க, அங்கிருந்து 108 ஆம்புலன்ஸூக்கும், கரூர் அரசு மருத்துவமனைக்கும் போன் செய்து தகவல் சொல்லி இருக்கிறார். உடனே,கரூரில் இருந்து 108 ஆம்புலன்ஸூம் வந்திருக்கிறது.

சம்பவ இடத்தில் ஆபத்தான நிலையில் இருந்த அந்த இளைஞரை ஆம்புலன்ஸில் ஏற்றுவதுவரை பார்த்துவிட்டு, ஆம்புலன்ஸ் டிரைவரிடம், 'கரூர் அரசு மருத்துவமனைக்கு தகவல் சொல்லிட்டேன். டாக்டர்கள் தயாராக இருக்காங்க. சீக்கிரம் அங்க இவரை கொண்டு போயிருங்க' என்று சூர்யபிரகாஷ் சொல்லி இருக்கிறார். அதற்கு சரியென தலையாட்டிய அந்த ஆம்புலன்ஸ் டிரைவர், விபத்தில் காயமடைந்த இளைஞரைக் கொண்டு போனது கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு. அங்கு அந்த இளைஞருக்குச் சிகிச்சை அளித்த பின்,அவரது உறவினர்களிடம் பில் தொகையைக் கூற, அவர்கள் கலங்கி போயிருக்கிறார்கள்.

இந்தத் தகவல் டி.ஆர்.ஓ. சூர்யபிரகாஸூக்கு போக,அந்த தனியார் மருத்துவமனைக்கு போன் போட்டு,"அந்த இளைஞரிடம் ஒருரூபா வாங்க கூடாது. இனிமேல் இதுபோல் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களை வைத்து,உங்களுக்கு ஆள் பிடிக்க கூடாது. மீறி செய்தால்,மருத்துவமனை அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என்று அழுத்தி சொல்லி இருக்கிறார். இன்னொரு பக்கம்,அந்த ஆம்புலன்ஸை காவல்துறையை விட்டு,மடக்க சொன்னவர்,அந்த டிரைவரை சஸ்பென்ட் செய்ய வைத்திருக்கிறார். "இனி இந்த மாவட்டத்தில் இப்படி ஒரு பித்தலாட்டம் நடக்காது. நடக்க விடமாட்டேன்" என்றார் நம்மிடம் டி.ஆர்.ஓ சூர்யபிரகாஷ்.