கார் டிரைவர் மணிகண்டன் மரணம்... கீழ்ப்பாக்கத்தில் குவிந்த போலீஸ்.. காரணம் என்ன?

கார் டிரைவர் மணிகண்டன்

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த கார் டிரைவர் மணிகண்டன், தரமணி ராஜிவ் காந்தி சாலையில் கடந்த புதன்கிழமை அன்று கார் ஓட்டிச் சென்றுகொண்டிருந்த போது சீட் பெல்ட் அணியாததாலும், சீருடை அணியாததாலும் போலீசாரிடம் அபராதமாக நூறு ரூபாய் பணம் செலுத்தியுள்ளார்.  தன்னை அடுத்து பலரும் போலீசாரிடம் அபராதம் செலுத்தவே அதனை வீடியோ எடுக்க முயன்ற மணிகண்டனை, ரிசர்வ் சப் இன்ஸ்பெக்டர் தாமரைசெல்வன் உள்ளிட்ட மூன்று பேர்...அருகில் இருக்கும் போலீஸ் பூத்துக்கு அழைத்துச் சென்று தகாத வார்த்தையால் பேசித் தாக்கியுள்ளனர். இதில் மனமுடைந்த டிரைவர் மணிகண்டன் அருகில் உள்ள பெட்ரோல் பங்குக்கு சென்று பெட்ரோல் வாங்கித் தன் மேல் ஊற்றிக் கொண்டு தன்னை எரித்துக் கொண்டுள்ளார். கழுத்துக்கு கீழான பகுதிகள் 60% எரிந்த நிலையில் ‘என்னை நான்கு போலீஸ் அடித்தார்கள்.. ஐயோ வலிக்கிறது..” என்று காரில் அமர்ந்தபடி கதறக் கதற அவர் கொடுத்த வாக்குமூலம் அண்மையில் வாட்சப்பில் பரவியது.  உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். இறந்த மணிகண்டனுக்கு வயது 21.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மணிகண்டனை அவர் இறப்பதற்கு முன்பு சந்தித்த அவரது நண்பர் சுரேஷ், “மணிகண்டனின் ஓட்டுநர் உரிமம், மொபைல் என அனைத்தையும் பிடுங்கி வைத்துக் கொண்டு, “உங்கள் குடும்பத்துப் பெண்களை இப்படி வீடியோ எடுக்கலாமே?’ என்று ஆபாசச் சொற்களால்  போலீஸ் தரப்பினர் திட்டியிருக்கிறார்கள். அதில் மனமுடைந்தே மணிகண்டன் இப்படிச் செய்துவிட்டார் என்று கூறியிருக்கிறார். 

மணிகண்டன் இறந்தபின்பு மருத்துவமனைக்கு வந்திருந்த அவரது அண்ணன் முறை உறவினர் ஒருவர்,”ஊரில் மணிகண்டனுக்கு ரெண்டு அக்கா ஒரு தம்பி, இவர்களில் தம்பி தற்போதுதான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். ஒரு அக்கா திருமணமாகி தாம்பரத்தில் வசித்து வருகிறார். மணிகண்டனின் அப்பா கூலித் தொழிலாளியாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மொத்தத்தில் மணிகண்டனின் குடும்பம் அவரது சம்பளத்தைத்தான் பிரதானமாக நம்பியிருந்தது. தற்போது மணிகண்டன் இறந்துவிட்ட சூழலில் அந்தக் குடும்பம் கதிகலங்கி நிற்கிறது. குடும்ப வறுமை காரணமாக தனது 18 வயதிலேயே வேலைக்கு வந்துவிட்டார் மணிகண்டன்.  கடந்த மூன்று வருடங்களாகச் சென்னையில் வசித்து வருகிறார். தொடக்கத்தில், கிடைத்த வேலைகளைச் செய்துவந்த மணிகண்டன் அதன்பிறகுதான் கார் ஓட்டுநரானார். மணிகண்டன், சிறுவயதிலிருந்தே யாருடைய வம்புக்கும் போகாத அமைதியான பிள்ளை. போலீஸ் அப்படித் திட்டியதுதான் அவரை அப்படிச் செய்யத் தூண்டியிருக்கிறது. காவல்துறை தொடர்புடைய அதிகாரியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்காமல் தற்காலிகப் பணிநீக்கம் மட்டும் கொடுத்து பிரச்னையை மூடிமறைக்கப் பார்க்கிறார்கள்” என்றார் சோகத்துடன். 

கீழ்ப்பாக்கம் மருத்துவமணைப் பிணவறை

இறந்த மணிகண்டனின் உடல் நெல்லை சங்கரன்கோவிலை அடுத்துள்ள ஆயால்பட்டி என்னும் கிராமத்திற்கு பிரேத பரிசோதனைக்குப் பிறகு எடுத்துச் சென்றுள்ளார்கள்.இறந்த தனது பிள்ளையின் உடலை முதலில் வாங்க மறுத்த பெற்றோரை, “தாக்கிய போலீசுக்கு எப்படியும் தண்டனை வாங்கித் தருவோம்” என்று உறுதி கூறி கார் ஓட்டுநர்கள் சங்கத்தின் முக்கியநபர்கள், அவர்களை உடலை வாங்கச் செய்துள்ளார்கள். பிரேத பரிசோதனை முடியும் வரை அங்கே மருத்துவமனையில் குழுமியிருந்த மணிகண்டனின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் அருகில் கூட ஊடகவியலாளர்களை போலீசார் நெருங்கவிடவில்லை. ஊடகவியலாளர்கள் என்று மட்டும் இல்லாமல் அங்கே குழுமியிருந்த இதர சொந்தபந்தங்களுக்கும் மணிகண்டனின் பெற்றோரைப் பார்க்கும் உரிமை மறுக்கப்பட்டது. பிணவறையைச் சுற்றி பாதுகாப்புக் கவசங்களுடன் போலீசார் நின்று கொண்டிருந்தார்கள். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முழுவதும் இன்று நாள்முழுதும் காவலுக்கு இருந்தார்கள். இதனால் மருத்துவமனையில் ஒருவித இறுக்கமான சூழல் நீடித்தது.    

மணிகண்டன் உடலைச் சங்கரன்கோவிலுக்கு ஏற்றிச் சென்ற அமரர் ஊர்தி

காவல்துறை அதிகாரிகள் உண்மையை மூடிமறைக்கப் பார்க்கிறார்கள் என்று அந்த உறவினர் கூறியது அப்படியே ஏற்றுக் கொள்வதற்கு இல்லை என்றாலும், மணிகண்டனின் பெற்றோரைச் சந்திக்க விடாமல், உறவினர்களைக் கூட உள்ளே அனுமதிக்க போலீஸ் மறுத்தது பல சந்தேகங்களை எழுப்புகிறது.

பிணவறைக்கு எதிரே ஓரமாக அமர்ந்திருந்த மணிகண்டனின் அக்காள் முறை உறவினர் ஒருவர்.. ”போலீஸ்காரங்கனா வீரம்னு சொல்லுவாங்க. தன்னைவிட பலம் குறைஞ்சவங்க கிட்ட தன்னோட பவரைக் காண்பிக்கறதுக்குப் பேரு வீரமா?” என்று கேட்டுக் கொண்டிருந்தார். அது காவல்துறை விளக்கம் அளிக்கவேண்டிய கேள்வி அதனால் நாம் கடந்துவந்துவிட்டோம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!