பேருந்துக்கட்டண உயர்வைக் கண்டித்து தி.மு.க போராட்டம்! - ஸ்டாலின், உதயநிதி பங்கேற்பு

dmk protest

பேருந்துக்கட்டண உயர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் தி.மு.க-வினர் இன்று (27.1.2018) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, சேப்பாக்கத்தில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க, சி.பி.ஐ, வி.சி.க, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் பங்கேற்றுள்ளன. மேலும், பேருந்துக்கட்டண உயர்வுக்கு எதிராகத் தாம்பரத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கனிமொழி, வைகோ உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஸ்டாலின்

இதுகுறித்து தி.மு.க வெளியிட்டிருந்த அறிக்கையில் ‘ஜனவரி 27-ம் தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகும் பேருந்துக் கட்டண உயர்வை அ.தி.மு.க அரசு மறுபரிசீலனைக்கு உட்படுத்தாமல், அனைத்துத் தரப்பு மக்களும் படும் துயரத்தைக் கண்டு பரிவுடன் கூடிய அணுகுமுறையைப் பின்பற்ற மறுக்குமேயானால் 29-ம் தேதி தமிழகம் முழுதும் உள்ள அனைத்துப் பகுதி, ஒன்றியங்கள், நகரங்கள்  என மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டு சிறை நிரப்பும் போராட்டத்தை தி.மு.க நிர்வாகிகளும் தோழர்களும் நடத்திட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அ.தி.மு.க அரசுப் பேருந்துக்கட்டணத்தை மறுபரிசீலனை செய்து பொதுமக்களுக்கு நிறைவளிக்கக்கூடிய முடிவை வெளியிடும் வரை ஜனநாயக முறையில் அமைதியான அறவழிப் போராட்டத்துக்கு தி.மு.க உடன்பிறப்புகள் அனைவரும் தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது’ எனத் தி.மு.க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!