வெளியிடப்பட்ட நேரம்: 13:53 (27/01/2018)

கடைசி தொடர்பு:16:35 (27/01/2018)

`நான் பன்னீர்செல்வம் மகன் பேசுறேன்..!’ - கலெக்டருக்கு வந்த பரபரப்பு போன்கால்

கிருஷ்ணகிரி மாவட்டக் கலெக்டர் கதிரவனுக்கு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு போனில் பேசிய நபர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் பேசுவதாகவும் கிருஷ்ணகிரி அருகே நடுப்பட்டி ஒந்தியம்புதூரைச் சேர்ந்த தமிழ்த்தென்றல் என் நண்பர் என்றும் அவரின் சகோதரிக்கு சத்துணவுப் பணியாளர் பணி வழங்கும்படி கேட்டுள்ளார். சந்தேகம் அடைந்த கலெக்டர் தன் உதவியார் மூலம் விசாரணை செய்ய உத்தரவிடவே, கலெக்டரின் நேர்முக உதவியாளர் குமரேசன் சத்துணவுப் பணியாளர் பணி ஆணையை நேரில் வந்து வாங்கிச் செல்லுமாறு அலுவலகத்துக்கு வரவழைத்துள்ளார். 

கிருஷ்ணகிரி கலெக்டரை மிரட்டிய ஆறுமுகம்

ஆறுமுகம்

26-ம் தேதி குடியரசு தினத்தன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள நடுப்பட்டி ஒந்தியம்புதூரைச் சேர்ந்த ஆறுமுகமும் அதே ஊரைச் சேர்ந்த தமிழ்த்தென்றலும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, கலெக்டரின் உதவியாளர் குமரேசனைச் சந்தித்துப் பேசியபடி, `சத்துணவுப் பணியாளர் பணியிடத்துக்குப் பணி நியமன ஆணை (அப்பாயின்மென்ட் ஆர்டர்) எங்கே?' என அதிகாரம் செய்துள்ளார் ஆறுமுகம். போலீஸ் வருவதற்குள் ஒரு கட்டத்தில் ஆறுமுகமும் தமிழ்த்தென்றலும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் குமரேசனைக் கடுமையாக மிரட்டியுள்ளனர். 

தமிழ்தென்றல்

தமிழ்த்தென்றல்

கிருஷ்ணகிரி தாலுகா போலீஸிஸ் எஸ்.ஐ விசுவநாதன், ஆறுமுகம் மற்றும் தமிழ்த்தென்றலை அள்ளிக்கொண்டு சென்று விசாரித்ததில் 2 பேரும் தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் பெயரைப் பயன்படுத்தி பொய்யான தகவலைக் கூறி மோசடி செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து இருவர் மீதும் மோசடி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்பிவைத்துள்ளனர் கிருஷ்ணகிரி போலீஸார்.