''சங்கர மடம் எப்போதுமே தமிழுக்கு எதிரானதுதான்'' - தகிக்கும் தமிழருவி மணியன் | "Sankara Mutt is always against Tamils" slams tamilaruvi manian

வெளியிடப்பட்ட நேரம்: 15:22 (27/01/2018)

கடைசி தொடர்பு:15:22 (27/01/2018)

''சங்கர மடம் எப்போதுமே தமிழுக்கு எதிரானதுதான்'' - தகிக்கும் தமிழருவி மணியன்

விஜயேந்திரர்

'ஆண்டாள் சர்ச்சை' அடங்குவதற்குள், 'தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை' தடதடக்க ஆரம்பித்துவிட்டது. விவகாரம் பூதாகரமாக மாறுவதைக் கவனித்த சங்கர மடம், 'தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது விஜயேந்திர சரஸ்வதி தியானத்தில் இருந்தார்' என  அறிக்கை வெளியிட்டது. ஆனால், இந்த விளக்கத்துக்கும்கூட, 'தேசியகீதம் பாடும்போது தியானம் என்ன ஆனது?' என்ற எதிர்க்கேள்வி கிளம்பியுள்ளது. 

இந்த நிலையில், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனிடம் இவ்விவகாரம் குறித்து கருத்து கேட்டோம்...

''சங்கரமடம் என்பது வரலாறு தொட்டே தமிழ் மொழிக்கு எதிரான மடம்தான். 'தியானத்தில் இருந்துவிட்டார்' என்று மடத்திலிருந்து இப்போது விளக்கம் தரப்பட்டுள்ளது. இப்படி அடிக்கடி தன்வயம் இழந்து தியானத்துக்குள் சென்றுவிடக்கூடியவர், எந்தப் பொதுவிழாவுக்கும் செல்லக்கூடாது. எல்லா நேரத்திலும் தியானம் செய்யக்கூடியவர் மாபெரும் துறவியாக காட்டுக்குள் போய் தனியாக உட்காரவேண்டும். நாட்டு மக்களிடையே வாழக்கூடியவர் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் தியானத்தில் ஈடுபட வேண்டும். பொதுவிழாவுக்கு வரும் நேரங்களில் விழிப்பு உணர்வுடன் இருக்கவேண்டும். மனிதனுக்கு முக்கியமானது விழிப்பு உணர்வு. இந்த விழிப்பு உணர்வினைத் தூண்டுவதுதான் தியானம்! 

நாட்டுப்பண் பாடும்போது விழிப்பு உணர்வு வருகிறது; தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது தியானத்தில் போய்விடுகிறது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமல்ல. 

வள்ளலார் இருந்த காலத்தில், அன்றைக்கு இருந்த சங்கராச்சாரியார், 'உலகத்தில் உள்ள எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதம்; சேய் மொழிதான் தமிழ்' என்றார். வள்ளலாரோ உடனடியாக, 'சமஸ்கிருதம் தாய் மொழியாக இருக்குமானால், தமிழ் தந்தை மொழி!' என்றார். 

தமிழருவி மணியன்

திருப்பாவையின் இரண்டாவது பாடல், 'வையத்து வாழ்வீர்காள்' எனத் தொடங்கும். இதில், 'தீக்குரலை சென்றோதோம்' என்று ஒரு வரி வருகிறது. இதில், 'தீக்குரல் என்பது ஒரு பொருளை தவறான வகையில் அடுத்தவரிடம் கொண்டு சேர்க்கிற கோள் சொல்லுதல்' என்பதாகும். ஆனால், பரமாச்சாரியார் சந்திரசேகரேந்திர சுவாமிகள் இதற்குக் கூறிய விளக்கம் 'திருக்குறளை நாம் ஓதக்கூடாது என்று ஆண்டாள் சொல்கிறாள்' என்பதாகும். தமிழ் மறை, உலகப் பொதுமறை என்றெல்லாம் நாம் சொன்ன திருக்குறளை 'தீக்குரல்' என்று சொன்னவர் அவர். இப்போது தமிழ்த்தாய் வாழ்த்தின்போது, தூங்கிப்போனவர் அந்த சந்திரசேகரேந்திர சுவாமிகளால் கண்டெடுக்கப்பட்டு மடத்தில் கொண்டுவந்து உட்கார வைக்கப்பட்டவர். 

சங்கர மடத்தின் மூலமான ஆதி சங்கரர், 'திராவிட சிசு' என்று ஞானசம்பந்தரைக் குறிப்பிடுகிறார். பார்ப்பன வகுப்பைச் சார்ந்த ஞானசம்பந்தர், வடமொழி தெரிந்தவர், வேதங்களை முற்றாக அறிந்தவர். ஆனால், 'வடமொழியில் வேதம் ஓதினால்தான் ஆண்டவனை அடையமுடியும் என்றெல்லாம் கிடையாது. தமிழிலேயே பாடி ஆண்டவனை அடையமுடியும்' என்று அறிவுறுத்தியவர் ஞானசம்பந்தர். அப்போது யாரும் அவருக்கு எதிராகப் பொங்கி எழவில்லை. அதேபோல், 'ஆண்டாள் ஒரு கற்பனைப் பாத்திரம்' என்று ராஜாஜி சொன்னபோதும், எதிர்க்குரல் எழவில்லை.

காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய இந்த சங்கர மடம் என்பது சைவ மடம். ஆனாலும்கூட தொடர்ச்சியாக இந்த மடம், வடமொழியை ஆதரிப்பவர்களாகவும், தமிழ் மொழியை புறக்கணிப்பவர்களாகவுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சங்கராச்சாரியாருடைய பார்வையில், வடமொழி 'தேவ பாஷை'; தமிழ் மொழி 'நீச பாஷை'. ஆக, அவருடைய வாரிசுகளாக இருக்கும் இவர்களும் தமிழை, கடவுள் நிலைக்குக் கொண்டுபோய் வாழ்த்துவதை ஏற்றுக்கொள்வதில்லை. அதனால்தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நீ தமிழை விரும்பாமல் இருக்கலாம்; உன்னுடைய மனம், வடமொழிக்கு இணையாக தமிழ் மொழி இல்லை என நினைக்கலாம். அது உன்னுடைய விருப்பம், சுதந்திரம், உரிமை! தமிழ் மொழிக்கு முதலிடம் தந்துதான் தீரவேண்டும் என்று நான் வற்புறுத்த முடியாது. ஆனால், சபை நாகரிகம் - பண்பாட்டை மறந்துவிடக்கூடாது.

இதே காஞ்சிபுரத்தில், நடைபெற்ற அரசு விழா ஒன்றில், பெரியார் கலந்துகொண்டார். காலம் முழுவதும் 'இந்திய ஒருமைப்பாட்டை' ஏற்காதவர். 'சாதி - மதத்துக்கு இடம்தராத அரசியல் அமைப்புச் சட்டம் இல்லை என்றால், நான் ஒருநாளும் அதனை மதிக்கமாட்டேன்' என்றெல்லாம் எதிர்த்தவர் பெரியார். அப்பேர்பட்ட பெரியார், அந்த விழாவில், நாட்டுப் பண் பாடப்பட்டபோது, தனது தள்ளாத வயதிலும் தடி ஊன்றி எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். ஆக, தனக்குப் புறம்பானதாக இருந்தாலும்கூட சபை நாகரிகம், பண்பாட்டைக் கருதி அதனைக் கடைப்பிடித்தவர் பெரியார். 

பெரியார்

இதுமட்டுமல்ல.... இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறேன். குன்றக்குடி அடிகளாரின் மடத்துக்கு யார் சென்றாலும், அவர்களது கையில் முதலில்  திருநீறு கொடுப்பார்கள். அன்றைக்கிருந்த குன்றக்குடி அடிகளாரின் மடத்துக்கு பெரியார் ஒரு சமயம் போயிருந்தார். அப்போது பெரியாரிடமும் திருநீறு கொடுக்கப்பட்டது. கையில் திருநீற்றை வாங்கியப் பெரியார், வெறுமனே கையில் மட்டும் வைத்துக்கொள்ளவில்லை... அப்படியே தனது நெற்றியிலும் பூசிக்கொண்டார். அருகில் இருந்தவர்கள்கூட, 'ஐயா திருநீற்றை கையில் வைத்துக்கொண்டால்கூட போதுமே... ஏன் பூச வேண்டும்?' என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பதிலளித்தப் பெரியார், 'எப்போது அவரது மடத்துக்குள் நாம் காலடி எடுத்து வைத்தோமோ, அப்போதிருந்து அந்த மடத்தின் மரபை மதிப்பதுதான் மனிதம்' என்றார். 

'when in rome, do as the romans do' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. 'நீ ரோமில் வாழ்ந்தால்,​ரோமர்களைப் போலவே நடந்துகொள்ள வேண்டும்' என்பதுதான் இதன் அர்த்தம். தமிழ்நாட்டில் உள்ள சங்கரமடத்தில் இருக்கும் நீங்கள் முதலில், தமிழனாக இருக்கவேண்டும். தமிழ் மண்ணில் இருந்துகொண்டு, அந்த மண்ணில் விளைகிற உணவைப் புசித்துக்கொண்டு இருக்கிற நீங்கள்... இந்தத் தமிழ் மண்ணுக்கு வணக்கம் செலுத்தக்கூடத் தயாரில்லை என்றால், அது எப்படி நியாயமாகும்?

என்னுடைய குற்றச்சாட்டு என்பது ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்தது அல்ல... ஏனெனில், தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தமிழுக்குச் செய்த தொண்டினை விடவும், உ.வே.சாமிநாத அய்யர், பரிதிமாற் கலைஞர் உள்ளிட்ட பார்ப்பனர்கள் செய்த தொண்டு மிக அதிகம். ஆனால், சங்கர மடம் என்பது, தமிழுக்கு உரிய மரியாதையை தர மறுக்கிற மடம்!'' என்று தெளிவாக விளக்கி முடிக்கிறார் தமிழருவி மணியன்!

 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close