வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (27/01/2018)

கடைசி தொடர்பு:16:17 (27/01/2018)

எந்த நேரத்தில் என்ன ஆகுமோ?- எகிறும் தி.மு.க கோஷ்டி மோதல்தி.மு.க-வைச் சேர்ந்த இருதரப்பு ஆதரவாளர்கள் புதுமாப்பிள்ளைபோல் முறுக்கிக்கொண்டு நின்றார்கள். இதனால், எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என்ற படபடப்பும் பரபரப்பும் நொடிக்கு நொடி எகிறியது.

தமிழக அரசு சமீபத்தில் பேருந்துக் கட்டணம் உயர்வை அறிவித்து, மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதைக் கண்டித்தும் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழகத்தில் உள்ள கட்சிகள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தின் மிகப்பெரிய  கட்சியான தி.மு.க, இன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

அந்தவகையில், புதுக்கோட்டை நகரில் உள்ள திலகர் திடலில் வடக்கு, தெற்கு தி.மு.க ஒற்றுமையாக இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு, திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் முரண்பட்டு நின்றது பெரியண்ணன் அரசுதான். இந்த இருவரின் ஆதரவாளர்களும் இரு அணிகளாகத் தனித்தனியாக நிற்கும்போதே புரிந்துவிட்டது.

இரண்டு தரப்பும் தங்களது `கெத்தை'க்காட்ட புதுமாப்பிள்ளை போன்ற முறுக்கைக் காட்ட ஆரம்பித்துவிட்டன என்பது. இரண்டு தரப்பில் யாராவது கொஞ்சம் எகிறினாலும் கோஷ்டி சண்டை அந்த மேடையிலேயே வெடித்துவிடும் அபாயம் நொடிக்கு நொடி எகிறிக்கொண்டே இருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் ரகுபதியும் புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லபாண்டியனும் மேடையில் ஒன்றாக இருக்க, பெரியண்ணன் அரசு கடைசிவரை மேடையில் ஏறாமல் கீழேயே நின்றுகொண்டிருந்தார். அவருடைய ஆதரவாளர்களும் அப்படியே நின்றுகொண்டிருந்தனர்.

‎கட்சித் தலைமை ஆர்ப்பாட்டத்துக்கு நாள் குறித்தபோதே, தனித்தனி கோஷ்டிகளாகப் பிரிந்துகிடக்கும் மாவட்டச் செயலாளர்களைத் தொடர்புகொண்டு, "பேருந்துக் கட்டணம் உயர்வு மக்களை நேரடியாகப் பெரிதும் பாதித்திருக்கிறது. எனவே, 27-ம் தேதி ஆர்ப்பாட்டத்தை நீங்கள் தனித்தனியாக நடத்தாமல் ஒன்று சேர்ந்து, ஒரே இடத்தில் நடத்துங்கள். உங்களுடைய முட்டல் மோதல்களை இதில் காட்டவும் முயல வேண்டாம். மக்கள் நம்மை உன்னிப்பாகக் கவனித்து வருகிறாரகள். ஒற்றுமையாக நடந்துகொள்ளுங்கள்" என்று எச்சரிக்கை செய்து இருக்கிறார்கள். இதில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க-வைப் பொறுத்தவரை  வடக்கு, தெற்கு  மாவட்டச் செயலாளர்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், ரகுபதிக்கும் பெரியண்ணன் அரசுக்குமிடையேதான் உரசல் நீருபூத்த நெருப்பாக எப்போதும் இருந்து வருகிறது. எனவே,கட்சித் தலைமை இந்த இருவரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தி இருக்கிறது. இதனையே இருவரும் தங்கள் ஆதரவாளர்களுக்கும் கூறி இருக்கிறார்கள். ஆனாலும், இரண்டு பேருடைய ஆதரவாளர்களும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டும் முறுமுறுத்துக்கொண்டும் இருந்தார்கள். ரகுபதி பேசும்போது, அவருடைய ஆதரவாளர்கள் பெரிய குரலெடுத்து கோஷமிட்டார்கள். அதேபோல்,பெரியண்ணன் அரசும் அவருடைய ஆதரவாளர்களும் அமைதியாகக் கீழே நெஞ்சு விடைத்து நின்றுக்கொண்டிருந்தார்கள். இதனால், ஆர்ப்பாட்டம் ஆரம்பித்து முடியும்வரை திலகர் திடல் வளாகமே பரபரத்துக் கிடந்தது.