`அன்றுபோல் நடந்துவிடக் கூடாது' - தஞ்சையில் ஒரு தலைவரைக் குறிவைக்கும் போலீஸ் | Security tightened across Thanjavur

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (27/01/2018)

கடைசி தொடர்பு:18:00 (27/01/2018)

`அன்றுபோல் நடந்துவிடக் கூடாது' - தஞ்சையில் ஒரு தலைவரைக் குறிவைக்கும் போலீஸ்

தஞ்சாவூரில் அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்துக் கட்சிகள் சார்பாக நாளை நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் வைகோ கலந்துகொள்கிறார். அவரிடம் அலர்ட்டா இருக்க வேண்டும் எனக் காவல் துறையினர் தவித்து வருகின்றனர்.

தஞ்சாவூர்
 

காவிரி டெல்டா பகுதிகளில் போதிய தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகி வருகின்றன. கடைமடைப் பகுதி விவசாயிகளின் நிலைமையோ இன்னும் பரிதாபமாக உள்ளன. கருகுகிற பயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என டேங்கர் லாரியில் தண்ணீரை விலைக்கு வாங்கி பயிருக்குப் பாய்ச்சும் அவல நிலையும் நடக்கிறது. இதை மத்திய மாநில அரசுகள் சுத்தமாகக் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் வேதனை கலந்த உண்மை.

கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப் பெற்றுத் தர வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்துக் கட்சிகள் சார்பாகத் தஞ்சாவூரில் வைகோ தலைமையில் நாளை மாபெரும் ரயில் மறியல் போராட்டத்தை நடத்துகின்றனர். இதை நினைத்துதான் காவல் துறையினர் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து என்னவென்று விசாரித்தோம், ஒரு சில இயக்கங்களைத் தவிர, தி.மு.க உட்பட எந்தக் கட்சி தஞ்சாவூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினாலும் ரயில் நிலையத்தின் வாசலிலேயே போலீஸாரை பெரிய அளவில் குவித்து பேரிகாட்டெல்லாம் வைத்து போராட்டக்காரர்களைத் தடுத்து கைது செய்துவிடுவார்கள் காவல்துறை உயர் அதிகாரிகள். இதுதான் வழக்கமாக நடந்தும் வருகிறது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் இதேபோல் காவிரியில் தண்ணீர் திறக்காத கர்நாடகாவைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

 இதில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டார். அப்போதும் இதேபோல் போலீஸார் தடுத்து நிறுத்தினர். நாங்க கர்நாடக மாநில மற்றும் மத்திய அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்துகிறோம். இதற்கு நீங்கள் ஒத்துழைப்புக் கொடுக்காமல் எங்களைத் தடுத்து நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம். நீங்கள் ரயிலை மறிக்க உள்ளே அனுமதிக்கவில்லை என்றால் நாங்கள் உங்க தடுப்பையும் மீறி உள்ளே செல்வோம் என்று காவல்துறையினரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதே மாதிரி அங்கு போடப்பட்டிருந்த தடுப்புகளைத் தூக்கி வெளியே போட்டுவிட்டு உள்ளே சென்று ரயில் மறியல் போராட்டம் செய்ததோடு நீண்ட நேரம் வைகோ உட்பட அனைவரும் தண்டவாளத்திலேயே அமர்ந்துப் போராட்டம் நடத்தினர். இந்தச் சம்பவம் போலீஸாருக்கு உயர் அதிகாரிகள் மத்தியில் பெரிய தலைவலியை ஏற்படுத்தியது.

இதேபோல் நாளை நடக்கும் போராட்டத்திலும் உள்ளே விடக் கூடாது என மத்திய மாநில அரசுகள் கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் என்னவெல்லாம் செய்து வைகோ உள்ளிட்ட தலைவர்களைத் தடுத்து நிறுத்தலாம் எனப் பலத்த யோசனை செய்து வருகிறார்கள் காவல் துறையினர்.
என்ன நடக்கிறது எனப் பார்ப்போம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க