வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (27/01/2018)

கடைசி தொடர்பு:17:30 (27/01/2018)

தமிழர் உரிமை மாநாட்டுக்கு அழகன்குளம் அகழாய்வுப் பிடிமண் எடுத்துச் செல்லும் நிகழ்வு!

மதுரையில் நடைபெறும் தமிழர் உரிமை மாநாட்டுக்காக ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் அகழாய்வுப் பகுதியில் இருந்து பிடிமண் எடுத்துச் செல்லப்பட்டது.

அழகன்குளம் அகழாய்வு பகுதியில் இருந்து பிடிமண் எடுத்து செல்லும் விழா

கீழடி, அழகன்குளம், ஆதிச்சநல்லூர் பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகளை முறையாக மேற்கொண்டு, வரலாற்று உரிமையை நிலைநாட்டிடவும் இந்தித் திணிப்பைக் கண்டித்தும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் ஆகிய அமைப்புகள் இணைந்து தமிழர் உரிமை மாநாட்டை மதுரையில் இன்று (27.1.2018) நடத்துகின்றன. இந்த மாநாட்டில் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், தொல்லியல் அறிஞர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் அளிப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் இருந்து பிடிமண் எடுத்து செல்லப்பட்டது. த.மு.க.எ.ச மாவட்ட தலைவர் ஜான்செளந்தரராஜ் தலைமையில் நடந்த விழாவில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் அப்துல்காதர், பிடிமண் அடங்கிய மண் பானையை எடுத்து வழங்க, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன் மற்றும் பங்கேற்றுள்ள பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிடி மண்ணுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மதுரையில் நடைபெறும் தமிழர் உரிமை மாநாட்டுக்கு வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர்.