`இது மக்களுக்கான போராட்டம்!' மயிலாடுதுறையில் மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா பேச்சு

பேருந்துக்கட்டண உயர்வைக் கண்டித்து நாகை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மயிலாடுதுறையில் இன்று (27.1.2018) நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா சிறப்புரையாற்றினார்.  

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகே நடைபெற்ற தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு நாகை வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமை தாங்கினார். தி.மு.க நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கட்டடத் தொழிலாளர் கட்சி ஆகிய கட்சியினரும் கலந்துகொண்டனர்.  

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், ``தனியார் வசமிருந்த போக்குவரத்துத் துறையை, மக்கள் நலன் கருதி கலைஞர்தான் அரசுடமையாக்கினார். அப்போதெல்லாம் முக்கிய ஊர்களுக்கு மட்டும் தனியார் பேருந்துகள் இயங்கி வந்த நிலையில், போக்குவரத்தே இல்லாத அனைத்துக் கிராமங்களுக்கும் பேருந்து வசதியை ஏற்படுத்தித் தந்தவர் கலைஞர். 

தி.மு.க ஆட்சி நடந்தபோது ஒருமுறைகூட பேருந்துக்கட்டணம் உயர்த்தப்படவில்லை. போக்குவரத்துத்துறையை ஒரு சேவை மனப்பான்மையுடன், மக்கள் பயன்பெறும் வகையில்தான் தி.மு.க நடத்தி வந்தது. ஆனால், இந்த ஆட்சியில் ஒரேடியாகப் பேருந்துக் கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள். இதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர் ஸ்டாலின்தான். இந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகும், கட்டண உயர்வைத் திரும்பப் பெறவில்லை என்றால், வரும் 29-ம் தேதி தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். சிறை நிரப்பும் போராட்டம் என்றால், கைதாகிச் சிறைக்குச் சென்று, பிரியாணி சாப்பிடப் போகிறோம் என்று அர்த்தமல்ல. இது மக்களுக்கான போராட்டம். மூட்டை தூக்கும் தொழிலாளர்கள், பூ, காய்கறி விற்கும் பெண்மணிகள், ஏழை விவசாயிகள், மாணவ, மாணவியர்கள் அனைவரையும் வதைக்கும் கட்டண உயர்வைத் தி.மு.க வன்மையாகக் கண்டிக்கிறது. கட்டண உயர்வை அரசு திரும்பப் பெறவில்லையென்றால் போராட்டம் தொடரும்’’ என்றார்.  
  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!