``இந்தியாவுக்கு ஏற்ற வகையில் சட்டத்தை மாற்ற முடியாது!’’ இலங்கை அமைச்சர் திட்டவட்டம் | Sri Lanka says no changes to be made in new bill on fishermen crossing border

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (27/01/2018)

கடைசி தொடர்பு:19:30 (27/01/2018)

``இந்தியாவுக்கு ஏற்ற வகையில் சட்டத்தை மாற்ற முடியாது!’’ இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

இலங்கை மீன்பிடி சட்டத்தில், இந்தியாவுக்கு ஏற்ற வகையில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது என அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

இலங்கை அமைச்சர் மஹிந்த அமரவீர

இலங்கை கடல் பரப்பினுள் அத்துமீறும் படகுகள், கப்பல்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்கும் வகையில் இலங்கை மீன்பிடி சட்ட திருத்தத்தை இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அரசு இரு நாள்களுக்கு முன் நிறைவேற்றியது. இலங்கை அரசின் இந்தச் சட்டத்தின் மூலம் தமிழக மீனவர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாவார்கள் என்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி இந்தப் புதிய சட்ட திருத்தத்தை  எதிர்த்துள்ளார். மேலும், இந்தச் சட்ட திருத்தத்தைத் திரும்பப் பெற இலங்கை அரசை வலியுறுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்தா அமரவீர ''இலங்கைக் கடல் பரப்பில் சட்டவிரோதமாக அத்துமீறும் மீன்பிடி படகுகளுக்காக இதுவரை அறிவிக்கப்பட்டு வந்த 1.5 மில்லியன் ரூபாய் அபராத சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் மூலமாக ரூ.60 லட்சம் முதல்1.75 கோடி இலங்கை ரூபாய் வரை அபராதமாக விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் மீன்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கிலேயே சட்டத்தில் திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.  இதன்மூலம் தமிழக மீனவர்கள் பாரம்பர்ய மீன்பிடித் தொழிலை செய்வதற்கு எமது கடற்பரப்பு இனி இடமளிக்காது என்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. அதேநேரத்தில், எங்கள் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக வரும் எந்தவொரு வெளிநாட்டு மீன்பிடி படகுகளுக்கும் இடமளிக்கப்போவதில்லை.

மேலும், இலங்கை மீன்பிடித் திருத்தச் சட்டத்தில் இந்திய மீனவர்களுக்கு ஏற்றவாறு திருத்தங்களை மேற்கொள்ள முடியாது. இலங்கை மீன்பிடி சட்டத்தில் செய்யப்பட்டிருக்கும் திருத்தத்துக்காகப் போராட்டம் நடத்துவதை விடுத்து, தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டாது தங்கள் கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதே சிறந்தது'' எனக் கூறியுள்ளார். இலங்கையை நட்பு நாடு என வார்த்தைக்கு வார்த்தை கூறி வரும் மத்திய அரசு தமிழக மக்களின் எதிர்ப்புகளையும் மீறி பல்வேறு உதவிகளை இலங்கைக்கு அளித்து வருகிறது. இந்நிலையில் புதிய சட்டத்தை இலங்கை அரசு திரும்பப் பெற மத்திய அரசு வலியுறுத்தும் என்ற நம்பிக்கையோடு மீனவர்கள் காத்திருக்கும் வேளையில், இலங்கை அமைச்சரின் இந்தப் பேச்சு மீனவர்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.