``400 காளைகள்; 403 மாடுபிடி வீரர்கள்!’’ ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் கோவை

40 ஆண்டுகளுக்குப் பிறகு, கோவையில் நாளை நடைபெற உள்ள  ஜல்லிக்கட்டுப்போட்டியில், 400 காளைகள் , 403 மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.

ஜல்லிக்கட்டு

கோவை மாவட்டத்தில் நாற்பதாண்டுகளுக்கு பிறகு,  ஜல்லிக்கட்டுப் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. வாடிவாசலுக்கான பூஜை கடந்த ஞாயிற்றுக்கிழமை போடப்பட்டது. நாளை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தில் பாதுகாப்புப் பணிகள் மற்றும் பார்வையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் அமரும் இடம், காளைகளைக் கொண்டு வருவதற்கான பாதை, அவை கட்டும் இடம் குறித்த அரசு அதிகாரிகளின் ஆய்வு மாவட்ட ஆட்சித் தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடந்தது.

ஜல்லிக்கட்டுப் போட்டி குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோவை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு, அரசாணை எண் 29 வெளியிடப்பட்டு, நாளை போட்டி நடைபெற இருக்கிறது. ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள செட்டிபாளையம் பகுதியில், ஏற்பாடுகள் குறித்து, கால்நடைத்துறை துணை இயக்குநர் மற்றும் விலங்கு நலவாரியம், காவல் துறை அதிகாரிகள், உள்ளிட்ட ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு ஆய்வு செய்துள்ளனர்.

இந்தப் போட்டிக்கான காளை வருகை மற்றும் போட்டியின்போது காளை விடப்படும் பாதை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. போட்டி நடைபெறும் 50 மீட்டர் தூரம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் வசதிகள், காளைகள் செல்வதற்கான பாதைகள் தயாராகி வருகின்றன. மேலும், இந்தப் போட்டியில் 400 காளைகள் , 403 மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். பாதுகாப்புப் பணிகளில் கோவை மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த 2,600 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!