வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (27/01/2018)

கடைசி தொடர்பு:23:00 (27/01/2018)

``கொலை மிரட்டல் வருகிறது!’’ - காவல்நிலையத்தில் புகார் அளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

 கொலை மிரட்டல் வருவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் சார்பாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் பற்றி அவதூறாகப் பேசியதாக அவருக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் ஆண்டாள் பக்தர்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். வைரமுத்துவின் கருத்தை வெளியிட்ட நாளிதழ் ஆசிரியர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வந்து மன்னிப்புக் கேட்டும் போராட்டம் தொடர்கிறது. ஆண்டாள் சந்நிதியில் வந்து வைரமுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும், அதுவரை போராட்டம் தொடரும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் ஒவ்வொரு ஊராகச் சென்று போராட்டம் நடத்தி வருகிறார்.

கொலை மிரட்டல்

இந்த நிலையில் `எங்களுக்கும் சோடாபாட்டில், கல் வீசத்தெரியும்' என்று ஜீயர் நேற்று பேசியது சர்ச்சையாகி வருகின்ற நிலையில், இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் ஜீயர் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், 'ஆண்டாளைப் பற்றி அவதூறாகப் பேசிய வைரமுத்து மன்னிப்புக் கேட்கும்வரை அறவழியில் போராட்டம் நடத்த மக்களுக்கு அழைப்பு விடுத்து வரும் ஜீயரின், செல்போனுக்கு கடந்த 25-ம் தேதி தொடர்புகொண்டு ஒருவர் மிகவும் ஆபாசமாகவும் கொலைமிரட்டல் விடுத்தும் பேசினார். 'Unknown' எண்ணிலிருந்து பேசியதால் மிரட்டல் விடுத்தவர் எண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதேபோல் மடத்தின் முகவரிக்கு மிரட்டல் கடிதமும் வந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க