காந்தியாக மட்டும் இல்லை காலாவாகவும் மாறுவார் ரஜினி - நண்பர் ராஜு பேச்சு

"எல்லா பிரச்சினைகளையும் "காந்தி"யைப் போல அமைதியாகக் கையாள மாட்டார் ரஜினி. சில பிரச்சினைகளை "காலா"வைப் போல கையாள்வார். எதிரிகளை வீழ்த்த மீண்டும் போயஸ் கார்டனில் ஒரு புயல் மையம் கொண்டு உள்ளது." என நடிகர் ரஜினிகாந்தின் நண்பர்  ராஜூ மகாலிங்கம் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் மாவட்ட ரஜினிகாந்த் மக்கள் மன்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ரஜினிகாந்தின் நண்பர் ராஜூ, "ஒழுக்கம், ஒத்துழைப்பு, கட்டுப்பாடு என்ற கொள்கையுடன் செயல்பட இருக்கிறது நம் கட்சி. நம் கட்சியின் உறுப்பினர்கள் இந்தக் கொள்கைக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும். பதவி பெறுவது என்பதை விட கட்சிக்காக உழைத்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். யார், யார் எந்தெந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்களோ, அந்தந்த மதக் கடவுளுக்கு கட்டுப்பட்டு அரசியல் செய்ய வேண்டும்.  கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், உண்மைக்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு அரசியல் செய்ய வேண்டும். நமது அரசியல் நேர்மையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும். இதுதான் நம் தலைவர் ரஜினி சொல்லும் "ஆன்மீக அரசியல்" ஆகும்.

நமக்குள் சண்டை சச்சரவுகள் வருமா?, நம் அரசியல் பாதை தடைபடுமா? என பல கட்சியினரும் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். அதற்கு நாம் துளியும் இடம் கொடுக்க கூடாது. எல்லாப் பிரச்னைகளையும் நமது தலைவர் "காந்தி"யைப் போல கையாள மாட்டார். பதிலடி கொடுக்க வேண்டிய சில பிரச்சினைகளை "காலா"வைப் போல கையாள்வார். எதிரிகளை வேரோடு பிடுங்க போயஸ்கார்டனில் மீண்டும் ஒரு புயல் மையம் கொண்டு உள்ளது. நான் அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினி அறிவித்தாரோ அப்போதே அடுத்த முதலமைச்சர் ரஜினிதான் என பெண்கள் முடிவு செய்து விட்டார்கள். அனைவருக்கும் பிடித்தமான உண்மையான அன்பான தலைவராக, முதல்வராக ரஜினி செயல்படுவார். உறுப்பினர் சேர்க்கைகளில் முழுமூச்சுடன் ஈடுபட வேண்டும்." என்றார். 

ஆலோசனைக் கூட்டம் துவங்குவதற்கு முன் ஒகி புயலில் மாயமான தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அளிக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!