வெளியிடப்பட்ட நேரம்: 01:01 (28/01/2018)

கடைசி தொடர்பு:01:01 (28/01/2018)

கோவை ஜல்லிக்கட்டு விழாவில் ஓ.பி.எஸ் படம் புறக்கணிப்பு... சஸ்பென்ஸ் வைக்கும் மைத்ரேயன்!

கோவையில் ஜல்லிக்கட்டு விளையாட்டு விழா அழைப்பிதழில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக, ஓ.பி.எஸ் ஆதரவாளர் மைத்ரேயன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில், நாற்பதாண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கு கடந்த ஞாயிறன்று வாடிவாசலுக்கான பூஜை போடப்பட்டு தொடங்கப்பட்டது. இதையடுத்து, நாளை நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப்போட்டியில் 400 காளைகளும் ,403 மாடு பிடி வீரர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான அழைப்பிதழ் இன்று காலை முதல் அனைவருக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த அழைப்பிதழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உள்ளாட்சி மற்றும் சிறப்பு திட்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

ஆனால் துணை முதல்வர் ஒ பி எஸ் படம் இல்லாமல் அச்சடிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எடப்பாடி ஆதரவாளர் என்பதால், அவரது மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் துணை முதலமைச்சரின் பெயர் அச்சிடப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

மைத்ரேயன்

இதற்கு சூலூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ கனகராஜ் வருத்தம் தெரிவித்திருந்தார். இரு அணிகள் இணைந்தும், மனங்கள் இணையவில்லை என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் மைத்ரேயன் ஏற்கெனவே கருத்து தெரிவித்திருந்தார். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக மைத்ரேயனிடம் கேட்டோம், “இது தொடர்பாக நான் தற்போது பேச விரும்பவில்லை. நேரம் வரும்போது கண்டிப்பாக, இதற்கு பதில் சொல்வேன்” என்பதோடு முடித்துக் கொண்டார்.