ஓட்டுநர் மணிகண்டன் மரணம் அரசுக்கான அபாய அறிவிப்பு: பழ.நெடுமாறன் காட்டம்! | Call taxi driver's suicide is an alarm for the government, says Pazha.Nedumaran

வெளியிடப்பட்ட நேரம்: 04:10 (28/01/2018)

கடைசி தொடர்பு:04:10 (28/01/2018)

ஓட்டுநர் மணிகண்டன் மரணம் அரசுக்கான அபாய அறிவிப்பு: பழ.நெடுமாறன் காட்டம்!

சென்னையில் கால்டாக்சி ஓட்டுநர் மணிகண்டன் மரணம் அரசுக்கான அபாய அறிவிப்பு என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், மக்கள் புரட்சி வெடிக்கும் என்றும் கூறினார். 

பழ.நெடுமாறன்

நெல்லையில் நடக்கும் சைவ சபை மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த பழ.நெடுமாறன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, ’’இலங்கை கடலில் வெளிநாட்டினர் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தால் 60 லட்சம் முதல் 17.5 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க வகைசெய்யும் வெளிநாட்டு மீன்பிடிப்படகுகள் ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி நிறைவேற்றப்பட்டு உள்ளது.  

இது போன்ற சட்டம் வேறு எந்த நாட்டிலும் கிடையாது. இந்திய மீனவர்களைப் பாதிக்கும் இந்தச் சட்டத்துக்கு பிரதமர் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். இந்தச் சட்டத்தை திரும்பப் பெற இலங்கை அரசை இந்தியப் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்தச் சட்டம் தமிழக மீனவர்களுக்கு பெரும் பாதிப்பாக அமைந்து விடும். அதனால் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியபோது, ஆளுநர் உட்பட எல்லோரும் எழுத்து நின்ற போது விஜயேந்திரர் அதற்குரிய மரியாதை அளிக்காமல் பொதுமேடையில் தியானத்தில் இருந்ததாகக் கூறுவது ஏற்புடையது அல்ல. பண்பாட்டை மீறிய இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தச் செயலுக்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். பெரியாருக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லாத போதிலும், மேடைகளில் கடவுள் வாழ்த்துப் பாடப்பட்டால் எழுந்து நிற்பார். அந்தப் பெருந்தன்மை விஜயேந்திரரிடம் இல்லாதது கண்டிக்கத்தக்கது. 

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு 3 மாதத்திற்குள் முடிவு எடுக்க உத்தரவிட்டுள்ளது. அதனால், மத்திய அரசு மனிதாபிமானத்துடன் முடிவு எடுக்க வேண்டும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை லாரிகளை நிறுத்தி டிரைவர்களை காவலர்கள் மிரட்டி பணம் வாங்குவதை தொழிலாகச் செய்து வருகின்றனர். 

சென்னையில் ஓட்டுநர் மணிகண்டன் என்பவரை காவல்துறையினர் மிரட்டி அடித்து உதைத்ததால் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தமிழக அரசுக்கு அபாய அறிவிப்பு, இதில், தலைமை காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், மக்கள் புரட்சி வெடிக்கும்’’ என்று பழ.நெடுமாறன் எச்சரித்தார்.