நாயைக் கொன்று போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு..! அதிர்ச்சியில் காவல்துறை | Theft happened at police inspector house in Pudukkottai

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/01/2018)

கடைசி தொடர்பு:11:00 (03/07/2018)

நாயைக் கொன்று போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு..! அதிர்ச்சியில் காவல்துறை

காவல் ஆய்வாளர் வீட்டில் நடந்த திருட்டுச் சம்பவம் புதுக்கோட்டை நகர காவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவிர, பொதுமக்களும் தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் அருகில் உள்ளது கட்டியாவயல் எனும் கிராமம். இங்கு வசிப்பவர் சுப்பையா. இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழுர் என்ற ஊரில் உள்ள காவல் நிலையத்தில் ஆய்வாளராக வேலைப்பார்க்கிறார். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தனது வீட்டிற்கு வந்துசெல்வார். வீட்டில் அவரது மனைவியும் பிள்ளைகளும் மட்டுமே இருந்துவந்தனர். 'பாப்பு' என்ற பெயர்கொண்ட வளர்ப்பு நாய் ஒன்றை தங்களின் பாதுகாப்புக்காக வளர்த்து வந்தனர். இந்தநிலையில், பொன்னமராவதியில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்துக் கொள்வதற்காக, சுப்பையாவின் மனைவியும் அவரது இரண்டு பிள்ளைகளும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நாய் மட்டும் வீட்டில் இருந்திருக்கிறது. 

இதனை நோட்டம் விட்ட திருடர்கள், வீட்டைக் கொள்ளை அடிக்கத் திட்டமிட்டு, பக்காவாக செயல்பட்டிருக்கிறார்கள். அன்றிரவே, கட்டிப்போட்டிருந்த நாய்க்கு எலியை சாகடிக்கப் பயன்படுத்தும் பிஸ்கட்டை நாலைந்துப் போட்டுக் கொன்றிருக்கிறார்கள். பிறகு, வீட்டுக்குள் நுழைந்து ஒரு இடம் பாக்கி விடாமல், பீராய்ந்து அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு கம்பி நீட்டி விட்டார்கள். திருவிழா முடிந்து நேன்று இரவு ஏழு மணிக்கு (27.01.2018) வீடு திரும்பிய சுப்பையாவின் மனைவி, வீடு திறந்துக்கிடப்பதையும் நாய் இறந்துக் கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் நுழைந்தவருக்கு இன்னும் அதிர்ச்சிக் காத்திருந்தது. பீரோக்கள் உடைக்கப்பட்டுத் திறந்துக்கிடந்தன. களவு போனதை உணர்ந்துக்கொண்டவர், தனது கணவருக்குத் தகவல் சொல்லியிருக்கிறார். சுப்பையா, திருக்கோகர்ணம் ஸ்டேஷனில் புகார் தரும்படி சொல்லியிருக்கிறார்.

தனது தம்பி, முத்துவை போன்போட்டு வரவழைத்து, இருவருமாக ஸ்டேசனில் புகார் கொடுத்திருக்கிறார்கள். திருக்கோகர்ணம் போலீசாரும் உடனடியாக வீட்டுக்கு வந்து எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள். நாம், சுப்பையாவின் மைத்துனர் முத்துவிடம் பேசினோம். மேற்கண்டத் தகவல்களை விவரித்தவர், "செலவுக்காக வைத்திருந்த முப்பதாயிரம் ரொக்கம், பாப்பாவுக்கு போட்டிருந்த மூன்று பவுன் செயின், கொஞ்சம் வெள்ளிப் பொருட்கள் எல்லாம் திருட்டுப்போயிருக்கிறது.

மொத்த மதிப்பு ஒன்றரை லட்சம் இருக்கும். வளர்ப்பு நாய்க்கு விச பிஸ்கட் கொடுத்துக் கொன்றுவிட்டு வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள்" என்றார். போலீஸ்காரர் வீட்டிலேயே திருட்டுப் போயிருப்பது, அந்த ஊர் மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.