வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (28/01/2018)

கடைசி தொடர்பு:14:30 (28/01/2018)

`தமிழ்நாட்டை அன்புமணி, திருமாவளவன் ஆளட்டும்!' - சீமான் பரபரப்புப் பேச்சு

`தமிழகத்தை நான் ஆள வேண்டும் என்று சொல்லவில்லை. தமிழ்நாட்டை தமிழர்கள் ஆளட்டும். அந்த வகையில் என் அண்ணன்களான அன்புமணி, திருமாவளவன் ஆளட்டும் என்றுதான் சொல்கிறேன்' என்று மொழிப் போர் தியாகிகள் வீரவணக்கம் நாள் பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார் சீமான் 

அரியலூரில் மாவட்டத்தில் மொழிப் போர் தியாகிகள் வீரவணக்கம் நாள் பொதுக் கூட்டம் அண்ணா சிலை அருகே நடைபெற்றது அக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் பேசியதாவது. `நீதித்துறை காவிமயமாகியுள்ளது என முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கூறியுள்ளது ஏற்புடையது. உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றம் குறித்து பேசியதற்கு அவர் மீது நடவடிக்கை எடுத்த உச்ச நீதிமன்றம் தற்போது, உச்ச நீதிமன்றம் குறித்து கருத்து கூறிய 4 நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஜனநாயக நாட்டில் மக்களுக்கு இருக்கின்ற ஒரே நம்பிக்கை நீதித்துறையே. அதுவே தற்போது கேள்விக்குறியாக உள்ளது. இதனால், மக்கள் அச்சத்துடனேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படும். தமிழக அரசு பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றிருந்தால் மட்டுமே அதில் வாழக்கூடிய மக்களும் பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கிறார்கள் எனக்  கூற முடியும்.

தமிழக அரசின், பேருந்துக் கட்டண உயர்வு போக்குவரத்து கழகத்தை படிப்படியாக தனியார் மயமாக்குவதற்கான முதல் கட்ட வேலையே. இது 6 மாதத்தில் தனியார் மயமாக்குவதற்கான முயற்சியாகும். போக்குவரத்து கழகம் நஷ்டம் என்று கூறி பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய ஆட்சியாளர்களுக்கு  ஜெயலலிதாவிற்கு ரூ.45 கோடிக்கு  சமாதி கட்டவும், ஸ்கூட்டி கொடுக்கவும் எங்கிருந்து பணம் வருகிறது. மக்களை முட்டாளாக்க தமிழக அரசு முயல்கிறது.

மக்களை அவதிபட வைத்துவிட்டு ஜெயலிலதாவுக்கு பல கோடி செலவில் சமாதி கட்ட சொல்லி அவரே கேட்டாரா? இப்போதிருக்கும் நிலைமையில் இந்த அரசியல்வாதிகள் ஏன் சமாதி கட்ட துடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று சொல்கிறார்கள். இந்த உலகத்துக்கத்துக்கே ஆளும் முறையை கற்றுக்  கொடுத்த பெருமைவாய்ந்த பாரம்பரியம் உடையவன் தமிழன். அத்தகைய மாநிலத்தை ஆள நம் தமிழர்கள் யாருமே இல்லையா? காவிரி, முல்லை பெரியாறு பிரச்னை, ஒகி புயலால் பாதிப்பு ஏற்பட்ட போதும் இவர்கள் எல்லாம் எங்கு போனார்கள். ரஜினி சிஸ்டம் சரியில்லை என்று அவர் சொல்கிறாரே.. சிஸ்டம் என்றால் என்ன? அதனை தெளிவாக சொல்லச் சொல்லுங்கள். இதனை ஏன் ஜெயலலிதா  இருந்தபோது சொல்லவில்லை. நான் ரஜினி, கமல் என அரசியலுக்கு வருபவர்கள் எல்லோரையும் எதிர்க்கவில்லை. என் தமிழ்நாட்டை தமிழர்கள் ஆளட்டும். அந்த வகையில் என் அண்ணன்களான திருமாவளவன், அன்புமணி, ஈஸ்வரன் ஆளட்டும். நான் சந்தோஷபடுவேன்.  அதை விட்டுவிட்டு மற்ற மாநிலத்தவர்கள் ஆள நினைத்தால் நான் ஒரு போதும் விடமாட்டேன்' என்றார் கொதிப்புடன்.