உணவுப் பொருள் வீணாவதைத் தடுக்கும் வகையில் விழிப்பு உணர்வை ஏற்படுத்த மாரத்தான்!

உணவுப் பொருள் வீணாவதைத் தடுத்து பசியால் வாடுபவர்களுக்கு உண்வுப் பொருள்களை கொண்டு சேர்ப்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்பு உணர்வு மாரத்தான் ஓட்டம் நெல்லையில் நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் இருந்து தொடங்கிய இந்தப் போட்டியில் பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த 3,600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நெல்லை, தூத்துக்குடி, குமரி, சென்னை, தஞ்சை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாணவர்களும் இளைஞர்களும் ஆர்வத்துடன் பதிவு செய்து போட்டியில் பங்கேற்றனர்.

மூன்று பிரிவுகளாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றன. 21 கி.மீ., 10கி.மீ., 5 கி.மீ தூரத்துக்கு நடைபெற்ற போட்டிகள் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி முன்பிருந்து தொடங்கின. 21 கி.மீ போட்டி சிவந்திபட்டி வரை சென்றது. இந்தப் போட்டியை நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார் தொடங்கி வைத்தார். 10 கி.மீ போட்டியை நெல்லை சரக டி.ஐ.ஜி-யான கபில்குமார் சரட்கர் தொடங்கி வைத்தார். 5 கி.மீ மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, போட்டியாளர்களுடன் சில கி.மீ தூரத்துக்கு ஓடினார்.

மாரத்தான் ஓட்டம்

21 கி.மீ தூரம் நடந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 30,000 ரூபாய் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது. இதேபோல, அடுத்தடுத்த பிரிவுகளுக்கு ரூ.10,000 மற்றும் ரூ.5,000 பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. உணவுப் பொருள் வீணாவதைத் தடுத்து பசியால் வாடுபவர்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பதை வலியுறுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. மாரத்தான் போட்டிக்காக ரன்னர்ஸ் டிரஸ்ட் என்ற அமைப்பினர் கடந்த சில வாரங்களாக, போட்டியில் பங்கேற்க பதிவு செய்தவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்த மாரத்தான் போட்டியை இனி வருடந்தோறும் நடத்த இருப்பதாக மாரத்தான் இயக்குநர் லெஷ்மி நிரஞ்சன் தெரிவித்தார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!