வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (28/01/2018)

கடைசி தொடர்பு:14:44 (28/01/2018)

கோவை ஜல்லிக்கட்டில் பெயர் புறக்கணிப்பு... ஓ.பி.எஸ் பதில்!

தமிழகம் முழுவதும் பேருந்துக் கட்டண உயர்விற்கு எதிராக மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என போராடிக்கொண்டிருக்கும் சூழலில், இன்று தேனி வட புதுபட்டியில் நடைபெற்ற போலியோ சொட்டுமருந்து முகாமில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் துணை முதல்வர் பன்னீர்செல்வம். அப்போது, பேருந்துக் கட்டண உயர்விற்கு எதிராக தொடரும் போராட்டங்கள் குறித்து  கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம், `பேருந்துக் கட்டண உயர்வு, தமிழக அரசின் மறுபரிசீலனையில் உள்ளது' என்றார். தொடர்ந்து, கோவை ஜல்லிக்கட்டு அழைப்பிதழில் அவரது பெயர் புறக்கணிப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்படதற்கு, `இதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை' என்று கூறிவிட்டு நகர்ந்தார். ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இடையே விரிசல் அதிகரித்துவருகிறது என்று சொல்லப்படும் சூழலில் பன்னீர்செல்வத்தின் இந்தப் பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

போலியோ சொட்டுமருந்து முகாமில் துணைமுதல்வர் பன்னீர்செல்வத்துடன், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், மாவட்ட ஆட்சியர் வெங்கடாலம், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னமாள் மற்றும் பொது சுகாதாரத்துறை உயர் அதிரிகாரிகள் கலந்துகொண்டனர். தேனி மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 4ஆயிரத்து 115 குழந்தைகள் இந்த முகாமால் பலனடைவர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.