’போலியோ இல்லாத உலகம் படைப்போம்’ - சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர் ஆழைப்பு!

நெல்லையில் தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், போலியோ இல்லாத உலகம் படைக்கும் வகையில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

போலியோ சொட்டு மருந்து முகாம்

இந்தியாவில் கடந்த 22 வருடங்களுக்கும் மேலாக தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் கடந்த 7 வருடமாக போலியோ தாக்கம் இல்லாத நிலைமை உருவாகி இருக்கிறது. அதனால் தொடர்ந்து இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று தமிழகம் முழுவதும் சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. நெல்லையில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முகாமைத் தொடங்கி வைத்தார். 

அப்போது பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ‘இந்த முகாம் மூலமாக நெல்லை மாவட்டத்தில் 2,64,360 குழந்தைகள் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கிறோம். அடுத்த தவணையாக மார்ச் 11-ம் தேதி இரண்டாம் கட்ட முகாம் நடத்தப்பட இருக்கிறது. நெல்லை மாவட்டம் முழுவதும் தற்போது கிராமப் பகுதிகளில் 1,608 மையங்களிலும் நகர்ப்புறங்களில் 150 மையங்களிலும் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 

இது தவிர, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், இடம்பெயர்ந்து குடியிருக்கும் கட்டடத் தொழிலாளர்களின் குழந்தைகள், செங்கல் சூளைகளில் பணியாற்றுபவர்களின் குழந்தைகள் ஆகியோருக்காக 20 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 5 வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. சுங்கச் சாவடிகள், புறவழிச்சாலைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மையங்கள் அமைத்துள்ளோம். 

முகாம்

சொட்டு மருந்து வழங்கும் பணியில் மருத்துவத்துறையைச் சேர்ந்த 1200 பேரும் கல்வித்துறையைச் சார்ந்த 305 பேரும் 3,189 சத்துணவுப் பணியாளர்களும், ரோட்டரி குழுவைச் சேர்ந்த 30 பேரும், 2,255 தன்னார்வலர்களும் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். மொத்தம் 6,979 பணியாளர்கள் மூலமாக சொட்டு மருந்து விநியோகிக்கப்படுகிறது. அதனால் பெற்றோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி, போலியோ இல்லாத உலகம் படைக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்றார்.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!