பஸ் கட்டண உயர்வு... வலுக்கும் கட்சிகளின் போராட்டங்கள்!

பஸ் கட்டணம்

பஸ் கட்டண உயர்வை ரத்துசெய்யக் கோரி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடந்துவருகிறது. ஏற்கெனவே திமுக அறிவித்துள்ள சிறைநிரப்பும் போராட்டத்தின் தொடர்ச்சியாக, பிப்ரவரி 1 முதல் தொடர் மறியல் போராட்டத்தில் இறங்கப்போவதாக சிபிஎம் கட்சி அறிவித்துள்ளது.  

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, தமிழக அரசு பயணக் கட்டணத்தை கடந்த 19ஆம் தேதி உயர்த்தியது. இரவு நேரம் அறிவித்து மறுநாள் அதிகாலையிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என அவசரகதியில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் 55% முதல் 100%வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டது மட்டுமில்லாமல், தாறுமாறாக கட்டணமுறை கொண்டுவரப்பட்டதும் பயணிகளுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது. பேருந்துகளில் நடத்துநர்களும் பொதுமக்களும் வாக்குவாதம், சச்சரவில் ஈடுபடும் அளவுக்கு கட்டண உயர்வு மோசமான விளைவுகளை உண்டாக்கியது. 

இதற்கிடையில், பேருந்துகளில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள், கட்டண உயர்வை ரத்துசெய்யவேண்டும் என போராட்டத்தில் குதித்தனர். மாநிலம் முழுவதும் ஒரு வாரமாக கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மதுரை, சென்னை, கோவை என பல இடங்களில் போராட்டம்நடத்தும் மாணவர்களிடம் போலீஸ் துறையினர் அத்துமீறி நடந்துகொள்கின்றனர். இது தொடர்பான காட்சிகள் ஊடகத்தில் வெளியாகியுள்ளன. 

அரசியல் கட்சிகளில், சிபிஎம், சிபிஐ கட்சியினர் மாணவர்கள் போராட்டத்தைத் தொடங்கியபோதே, ஆங்காங்கே தன்னிச்சையாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 22ஆம் தேதியன்று சிபிஎம் கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. 23ஆம் தேதி விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னையிலும் மறுநாள் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டது. 

பாமக சார்பில் 25ஆம் தேதி சென்னையில் அன்புமணி தலைமையிலும் விழுப்புரத்தில் ராமதாஸ் தலைமையிலும் போராட்டம் நடத்தப்பட்டது. மற்ற மாவட்டங்களிலும் போராட்டம் நடந்தது. 

திமுகவின் சார்பில் அழைப்புவிடுக்கப்பட்ட இன்றைய போராட்டத்தில் மதிமுக, காங்கிரஸ் உட்பட கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொண்டன. இந்தப் போராட்டத்தோடு நின்றுவிடாமல் தேவைப்பட்டால் அடுத்த கட்டமாக 29ஆம் தேதி முதல் திமுகவின் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இந்த நிலையில், அநியாய பேருந்து கட்டண உயர்வை உடன் ரத்து செய்ய வேண்டும், போராடுகிற மாணவர்கள் - இளைஞர்கள் - மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெறுவதோடு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி, பிப். 1 முதல் மாவட்ட / வட்ட தலைநகரங்களில் சிபிஎம் கட்சியானது தொடர் மறியல் போராட்டத்தை நடத்தும் என்று அதன் மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.  

இது குறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில், “ அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் அநியாய பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்களும், அனைத்துப் பகுதி பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் போராடி வருகின்றனர். குறிப்பாக லட்சக்கணக்கான மாணவர்கள் கட்டண உயர்வை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராடுவது என்ற உறுதியோடு வீதியில் இறங்கி வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நியாயமானக் குரலை ஏற்று கட்டண உயர்வை ரத்து செய்வதற்கு பதிலாக, அடக்குமுறையை எடப்பாடி அரசாங்கம் ஏவி வருகிறது. ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர், சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவர் - வாலிபர் தலைமை மீது குறிவைத்து வேட்டையாடும் வகையில் கடுமையான கிரிமினல் வழக்குகளை புனைந்து சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்துவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசின் இத்தகைய ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது” என்றும் இராமகிருஷ்ணன் கூறியுள்ளார். 

தற்போது, டிக்கெட் விலையை குறைத்து, தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், இதை எதிர்க்கட்சிகள் ஏற்குமா, அல்லது போராட்டங்கள் தொடருமா என்பது விரைவில் தெரியவரும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!