'பெஸ்ட் பாக்ஸர்' விருது பெற்ற போலீஸ் விட்ட 'பஞ்ச்’ ! - சென்னையில்  தீவிரவாதிகள் பிடிபட்ட பின்னணி... | Chennai police officers arrest terrorists

வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (28/01/2018)

கடைசி தொடர்பு:11:28 (28/01/2018)

'பெஸ்ட் பாக்ஸர்' விருது பெற்ற போலீஸ் விட்ட 'பஞ்ச்’ ! - சென்னையில்  தீவிரவாதிகள் பிடிபட்ட பின்னணி...                     தீவிரவாதிகள் ரயிலில் கொண்டு வந்தவை...

சாமில் இருந்து  துப்பாக்கிகளுடன் ரயிலில் வந்த இருவர், சென்னை போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர். போலீஸ் தரப்பில், 'பிடிபட்டவர்கள் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள், தமிழகத்தில் நாசவேலைக்கு முயற்சித்தது  முறியடிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது' என்று மட்டும் சொல்கிறார்கள்.'பிடிபட்டவர்கள் யார் ? குடியரசு தினத்துக்கு முன்பு ஜனவரி 24 அன்று சென்னை போலீசார் அவர்களை மடக்கியது எப்படி?' என்று விசாரித்த போது கிடைத்த தகவல்கள் அத்தனையும் பதற வைக்கும் ரகம்...

        திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரதீப். சில ஆண்டுகளாக சென்னை பெரம்பூரில் வசித்து வருகிறார்.  புறநகர்ப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று பெண்களின் சங்கிலிகளைப் பறித்த வழக்கில், இவரை மாதவரம் போலீசார் கைது செய்து மத்திய புழல் சிறையில் அடைத்தனர்.  புழல் சிறையில், சக கைதி ரபீக், பிரதீப்புக்கு நெருக்கமானார். ' அசாம், பீகார் மாநிலங்களில் இருந்து துப்பாக்கிகளை ரயிலில்  கொண்டு வந்து நான் சொல்கிற ஆள்களிடம் கொடுத்தால் ஒரு 'டிரிப்'புக்கு ஒரு லட்சம் வரை சம்பாதிக்கலாம்.  மாதத்தில் 20 ட்ரிப் கூட போகலாம்' என்று  பிரதீப்புக்கு, ரபீக் வழியைக் காட்ட அவர் அசாமிற்கு சென்றுள்ளார். சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த கமல் என்ற இளைஞரையும்  தனது கூட்டணியில் பிரதீப் சேர்த்துக் கொண்டுள்ளார். அந்த வகையில் ரயில் பயணம் இனிதே தொடங்கியிருக்கிறது.  அப்படி துப்பாக்கிகளுக்காகப்  போய்வந்த பயணத்தில்தான், கமலும், பிரதீப்பும் போலீசாரிடம் மாட்டிக் கொண்டனர். இந்த பிளானின் பின்னனியில் இருக்கும் ரபீக், சிறைக்குப் போகும் முன், எங்கிருந்தார்?  எப்படி இருந்தார்?


தீவிரவாதிகள்  பிரதீப், கமல்சின்னதாய் ஒரு பிளாஷ்-பேக் 
 மருந்து வியாபாரி என்ற அடையாளத்துடன் சென்னை மண்ணடியில் இருந்த இலங்கை ஜாகீர் உசேன்  2014 ஆம் ஆண்டு  போலீசாரால், கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்டார் என்று இவர் மீது தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) குற்றஞ் சாட்டியது. ஜாகீர் உசேன் அளித்த தகவலால், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்ற அடையாளத்துடன், சென்னை சாலிகிராமத்தில் இருந்த அருண்செல்வராஜ் என்பவரையும் என்.ஐ.ஏ., அடுத்ததாகக் கைது செய்தது. அடுத்தடுத்த விசாரணையில்  இலங்கை சிவபாலன், அப்துல் சலீம் ஆகியோரும் இந்த தொடர்பில் இருந்தது தெரியவர அவர்களும் கைதாகினர். இவர்களின் முக்கியக் கூட்டாளிதான் ரபீக், பிடிபட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை கொடுங்கையூரில் அவர் சிக்கினார். அனைவரும் மத்திய புழல்சிறையில் அடைக்கப்பட்டனர்.  இலங்கைக்கான பாகிஸ்தான் துணைத்தூதரக அதிகாரி சிக்கந்தர்ஷா என்பவர்தான் இந்த டீமை இயக்கியவர் என்பது  இவர்களிடம் நடந்த விசாரணையில் வெளியில்  வரவே, இதுகுறித்து இலங்கை அரசு, விசாரணை நடத்த அழுத்தம் கொடுக்கும்படி மத்திய அரசை என்.ஐ.ஏ. கேட்டுக் கொண்டது.


புழல்சிறையில் போட்ட திட்டம் !

அடுத்தகட்ட நடவடிக்கையாக சிறையில் இருக்கும் தீவிரவாதிகளுக்கு உதவுகிறவர்கள், அவர்களின் தொடர்பில் இருப்பவர்களைப் போலீசார், கண்காணித்தனர். ரபீக்கிடம்  சிறையில் அதிக நெருக்கம் காட்டிய பிரதீப் மீது கவனம் செலுத்தினர். சிறையிலிருந்து விடுதலையாகி பிரதீப் வெளியில் வந்து விட்டாலும் அடிக்கடி 'பார்வையாளர் மனு' மூலம் ரபீக்கை,  சந்தித்து வந்ததையும் கவனத்தில் கொண்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். ரபீக்கை மனு போட்டுப்  பார்த்து விட்டு வெளியில் வந்த பிரதீப், முன்பே பேசி வைத்தபடி ரயிலில் துப்பாக்கிகளைக் கொண்டுவர கடந்த 23-ஆம் தேதி அசாம் சென்றார். கௌஹாத்தி டூ சென்னை வழியாக திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் வருகிற பிரதீப், கமல் இருவரையும் பிடிக்க சென்னை போலீசார் திட்டமிட்டனர். ரயில் புறப்படத் தொடங்கியது முதல் ஒவ்வொரு ஸ்டேசனில் நிற்கும் போதும் போலீஸ் உயரதிகாரிகளுக்கு அந்தந்த ரயில்வே ஸ்டேசனின் மக்கள் நடமாட்டம், பாதுகாப்பு அம்சம் குறித்தத் தகவல்களைப் ஸ்பெஷல் டீம் போலீசார், தெரிவித்தபடி பயணித்தனர்.  கௌஹாத்தி  எக்ஸ்பிரஸ், சென்னைக்குள் நுழைந்ததும் போலீசாரின் கண்காணிப்பும், பதற்றமும் பன்மடங்கு எகிறியது.
 

இன்ஸ்பெக்டர் வீரக்குமார்ஆபரேசன் எப்படி  நடந்தது ?
சென்ட்ரல், பேசின்பாலம் போன்ற இடங்களை ரயில் கடந்த போது, 'எந்த நேரமும் குற்றவாளிகளைப் பிடிக்கத் தயாராக இருங்கள், இடத்தின் பாதுகாப்புக் குறித்தத் தகவலைச் சொல்லிக் கொண்டே இருங்கள்' என்ற உத்தரவு வந்து கொண்டே இருந்தது.  திருவொற்றியூர் 'யார்டு' பகுதிக்குள் ரயில் நுழையும் போது வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரக்குமாரை, 'யார்டு' க்குப் போகச் சொல்லி காவல்துறை தலைமையில் இருந்து உத்தரவு வர, வீரக்குமார் அங்கு காரில் விரைந்துள்ளார்.கௌஹாத்தி எக்ஸ்பிரஸ், 25- ஆம் தேதி காலை 9 மணிக்கு திருவொற்றியூர் யார்டு பகுதியை அடைந்ததும், காத்திருந்த போலீஸ் டீம் புலிப்பாய்ச்சலில் ரயிலுக்குள் பாய்ந்தது. ஏற்கெனவே அதே ரயிலில் இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் சாதாரண உடையில் கூடவே வந்ததால், அவர்களும் குற்றவாளிகளை வளைத்தனர். அப்போது பிரதீப்பும், கமலும் போலீசாரைத் தாக்கி விட்டு அங்கிருந்து தப்ப முயற்சிக்க எதிர்பாராத தாக்குதலில் பிளாட்பாரத்தில் மயங்கி விழுந்துள்ளனர். போலீசாரைத் தாக்க முயன்றவர்கள் தப்பித்து ஓட முடியாதபடி ஆக்ரோஷமாக அவர்களைத் தாக்கியது யார் ? பிரதீப் முகத்தில் விழுந்த முதல் குத்துக்குச் சொந்தக்காரர் எம்.மாரியப்பன். சென்னை திருவொற்றியூர் காவல்நிலைய தலைமைக் காவலர். தமிழ்நாடு காவல்துறைப் பணிக்கு வருவதற்கு முன்னர் நூற்றுக்கணக்கான குத்துச் சண்டைப் போட்டிகளில் பங்கேற்ற மாரியப்பன், இரண்டுமுறை சிறந்த குத்துச் சண்டை வீரருக்கான விருது பெற்றவர். இப்போது அவருடைய ஆற்றல் காவல்துறையில் சேவையாற்ற பயன்படுகிறது. இன்னொரு குற்றவாளியான கமல் மீது விழுந்த, இரண்டாவது குத்துக்கு சொந்தக்காரர் இன்ஸ்பெக்டர் வீரக்குமார். பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டராக வீரக்குமார் இருந்தபோது தீவிரவாதி போலீஸ்பக்ருதீனை இதேபோல் அதிரடி 'குத்து' விட்டு நிலைகுலைய வைத்தார். அந்தக் குத்துக்குப் பின்னரே, போலீஸ்பக்ருதீன் சரண்டர் ஆனார்.பிடிபட்டவர்களிடம் போலீசார் மீட்ட பொருட்களில், ஒன்றரை லட்ச ரூபாய் கொடுத்து அசாமில் வாங்கப்பட்ட ஐந்து துப்பாக்கிகள், 25 தோட்டாக்கள் இருக்கிறது. அதே வேளையில், அசாமில் எதையும் கொடுக்காமல், இவர்கள் வாங்கி வந்த  4 லட்சரூபாய்க்கான  புத்தம் புதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளும், போதைப் பொருட்களும் எதைச்  சொல்ல வருகின்றன ? திருச்சியில் துப்பாக்கிகளுடன் இதேபோல் சிக்கிய மூவர் யார் ? சென்னை கோயம்பேடு பகுதியில் பணியாற்றிய போலீஸ்காரர் ஒருவரும் இதில் முக்கிய பங்காற்றியதாக சொல்லப்படுகிறதே... கேள்விகள் நிறையவே அணிவகுக்கிறது...

 


டிரெண்டிங் @ விகடன்