ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் இன்று சிறைப்பிடிப்பு!

 ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருடன் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் இன்று காலை சிறைப்பிடித்துச் சென்றனர். தொடர்ச்சியாக படகுகள் சிறைபிடிக்கப்படுவதால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படை தொல்லையால் மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர்..

இலங்கை கடற்படை, பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் நீரிணை பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சிறைப்பிடித்துச்  செல்வது, தாக்குதல் நடத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 116 மீனவர்கள் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ள 175 படகுகளும் இலங்கை அரசின் பிடியில் உள்ளன.

இந்நிலையில் இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் மீன்பிடிப்புப் படகுகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகையினை உயர்த்தும் வகையில் புதிய சட்ட திருத்தத்தினை கடந்த 24-ம் தேதி இலங்கை அரசு நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேரையும் அவர்களது இரு படகுகளையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்துச் சென்றது.

இதே போல் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற சிபிசன், டிக்கிரோஸ் ஆகியோரது இரு படகுகளையும், அதில் இருந்த மீனவர்கள் டினோகர், பிரைட்டன், ஆரோக்கியதாஸ், விஜயகுமார், இமான், பிரியன்ரோஸ், ஸ்டீவாக் உள்ளிட்ட 12 மீனவர்களையும் இன்று காலை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர். 

ஏற்கெனவே சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் மேல் கடிதத்தினை எழுதி கொண்டே இருக்கிறார். இதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கையின் விளைவாக சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களும் படகுகளும் விடுவிக்கப்படுவார்கள் என நம்பிக்கை கொண்டிருக்கும் நிலையில் அதற்கு நேர்மாறாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ச்சியாக சிறைப்பிடித்து வருகிறது. இந்த சம்பவங்களால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!