வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (28/01/2018)

கடைசி தொடர்பு:14:00 (28/01/2018)

`50 அடி தூரம்கூட நடக்க முடியாதவர்கள் எப்படி அரசியலில் ஜெயிக்க முடியும்?' - எர்ணாவூர் நாராயணன் கேள்வி

`நடிகர்கள் அரசியலுக்கு வருவது தவறில்லை. எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிடமுடியாது. வேகமாக 50 அடி தூரத்திற்கு மேல் நடக்க முடியாத ரஜினி, கமல் எப்படி அரசியலில் ஜெயிக்க முடியும்?' என சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவரும் முன்னாள்  எம்.எல்.ஏ.வுமான  எர்ணாவூர் நாராயணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமத்துவ மக்கள் கழகத்தின் 3வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடிக்கு வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம், `மக்கள் பிரச்னைகளைப் பற்றி கவலைப்படாத இந்த ஆட்சி, தொடர்ந்து நிலைக்க வாய்ப்பில்லை. அமைச்சர்கள் தெளிவான பதில் சொல்லாமல் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் உள்ள அமைச்சர்கள் ஆயிரம் பஸ்கள் வரை வாங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே போக்குவரத்து ஊழியர்களின் பணம் ரூ.7 ஆயிரம் கோடியை இந்த அரசு கையாண்டு செலவு செய்துவிட்டது. ஓய்வு பெற்று பணப்பலனை பெற முடியாததால் பல ஊழியர்கள் மகளின் திருமணத்தை நடத்த முடியாமல் தவிப்பில் உள்ளனர். இப்பிரச்னைக்கு முதல் கட்டமாக 200 கோடி ரூபாயைத் தருகிறேன் என அறிவித்துவிட்டு இதுநாள் வரை அந்தப் பணமும் தரப்படவில்லை. ஓ.பி.எஸ்-ஸின் சொந்த மாவட்டத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புதிய ரோடு போடுவதற்காக  நிதி ஒதுக்கி ரோடே போடாமல் பணத்தை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதிகாரிகள் அமைச்சர்களுக்கு ஐடியா கொடுத்து திட்டம் போட்டு பணத்தை எடுத்துக் கொள்ளும் நிலைதான் தற்போது நிலவி வருகிறது. நடிகர்கள் அரசியலுக்கு வரலாம், தவறில்லை. ஆனால், எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. 50 அடி தூரம் வரை மட்டுமே வேகமாக நடக்க முடியும் இவர்களால் எப்படி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து ஓட்டு கேட்டு அரசியல் செய்து ஆட்சி அமைக்க முடியும். ரஜினி சொல்லும்  ஒத்துழைப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு என்பதெல்லாம் தனி ஒரு மனிதனுக்கு மட்டும்தான் பொறுந்தும். அவர் சொல்லும் ஆன்மிகம்  அரசியலில் கலக்காது. அதை வைத்து அரசியல் செய்ய முடியாது. ஆன்மிகம் என்பது வேறு. அரசியல் என்பது வேறு. அவர் இரண்டையும் சேர்த்து அரசியல் செய்ய முடியும் எனச் சொல்வது வியப்பாக உள்ளது' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க