’’பேருந்து கட்டணத்தை குறைத்திருப்பதாக அரசு அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல்!’’ - திருமாவளவன் பேச்சு

" பேருந்து கட்டணத்தை குறைத்திருப்பதாக அரசு அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகவே உள்ளது. இதற்காக போராடிய மாணவர்களை அரசு அவமதித்துள்ளது." என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " பேருந்து கட்டணத்தை குறைத்திருப்பதாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்களை ஏமாற்றுவது போல உள்ளது. இதற்காகப் போராடி வரும் மாணவர்கள், அனைத்து கட்சியினரைக் கொச்சைப் படுத்துவதாகவும் அவமதிப்பதாகவும் உள்ளது. கிலோ மீட்டருக்கு இரண்டு பைசாவும், 10 பைசாவும் குறைப்பது தேவை இல்லை. உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.  

முழுமையான ரத்து அறிவிப்பு வரும் வரை எதிர்கட்சிகளின் போராட்டம் தொடரும். இதில் எந்த அரசியல் லாபமும் இல்லை. மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதே நோக்கம். இந்த தொடர் போராட்டங்களால் கட்டணத்தை குறைத்துவிட்டால் இது எதிர்கட்சிகளுக்கு லாபமாகிவிடும் என அ.தி.மு.க. அரசு நினைக்காமல் மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். 

காவி உடை உடுத்தி ஆன்மீகத்தில் இருந்து கொண்டு மக்களுக்கு நற்செய்தியை வழங்கும்  மதிக்கத்தக்க இடத்தில் இருக்கும் ஜீயர் போன்றவர்கள் வைரமுத்து விவகாரத்தில், பாட்டில் வீசவும் தெரியும், கல் எரியவும் தெரியும் என கூறி இருப்பது இவர்கள் முழுமையான ஆன்மீகத்தில் இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது. இந்த அச்சுருத்தலுக்கு வைரமுத்து பயப்பட மாட்டார், பணிந்துவிடக்கூடாது என நான் தெரிவித்துக் கொள்கிறேன். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வை எழுதிட முடியும் என்று மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள வரையறையை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த வரையறையை எதிர்க்க வேண்டும். நீட் தேர்வே இல்லாத நிலை ஏற்பட வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!