வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (28/01/2018)

கடைசி தொடர்பு:18:30 (28/01/2018)

’’பதவிக்காக மோடியைச் சந்தித்த முதல்வர் விவசாயிகளுக்காக சந்திக்காதது ஏன்?’’ - தஞ்சையில் சீறிய வைகோ

’’பதவிக்காகவும், கட்சி பிரச்னைக்காகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். காவிரி நீர் இல்லாமல் கருகும் பயிரை காப்பாற்ற முடியாமல் விவாசயிகளின் அடி வயிறு எரிகிறது. இந்தநிலையில் கர்நாடக அரசிடம் இருந்து காவிரி நீர் பெற்று தர வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியைச் சந்திக்கவில்லை. விவசாயிகளையும் தமிழக மக்களையும் காப்பாற்ற முதல்வர் தவறிவிட்டார் என்பது வேதனை’’ என ரயில் மறியல் போரட்டத்தில் வைகோ பேசினார்.


டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் காய்ந்து வருகிறது. கடன் வாங்கி பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகுவதை கண்டு விவசாயிகள் விம்மி வருகிறார்கள். இந்த நிலையில் கருகும் நெற்பயிரைக் காப்பாற்ற உடனடியாக கர்நாடக அரசிடமிருந்து காவிரி நீரை பெற்று தரக்கோரி அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் தஞ்சாவூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. 

இதில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். தஞ்சை ரயில் நிலையத்தில்,  சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை வைகோ உள்ளிட்டவர்கள் மறித்து தண்டவாளத்தில் அமர்ந்ததோடு, ’’வஞ்சிக்காதே வஞ்சிக்காதே டெல்டா விவசாயிகளை வஞ்ச்சிக்காதே, கருகுதே கருகுதே சம்பா பயிர் கருகுதே, எரியுதே எரியுதே விவசாயி வயிறு எரியுதே, கர்நாடக அரசிடம் இருந்து காவிரி நீர் பெற்று தர மத்திய அரசுக்கு  நிர்பந்தம் கொடு, காப்பாற்று காப்பாற்று தமிழக விவசாயிகளை காப்பாற்று, மத்திய அரசைக் கண்டிக்கிறோம், மோடி அரசைக் கண்டிக்கிறோம், பதவிக்காக மோடியைச் சந்தித்த முதல்வர், தமிழக மக்களுக்காகவும்,விவசாயிகளுக்காகவும்  ஏன் சந்திக்க வில்லை என கோஷமிட்டனர்.

பின்னர் பேசிய வைகோ, ’’50 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகி வருகிறது. அதைக் காப்பாற்ற இரண்டு முறையாவது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் அங்கு தண்ணீர் இல்லை. விவசாயிகள் கடன் வாங்கி பயிரிட்டுள்ளனர். தண்ணீர் இல்லாத சூழலில் பயிர்கள் கருகினால் விவசாயிகள் அனைவரும் கடனாளியாகி விடுவார்கள். மேகதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு பச்சை கொடி காட்டிவிட்டது மத்திய அரசு. உடனே  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிப்பதோடு, அனைத்துக் கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்து தண்ணீர் பெற்றுத்தந்து விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் இந்த கடமையை அவர் செய்யவில்லை. தமிழக மக்களுக்கு கடமை ஆற்றாத  முதல்வரை கண்டிக்கிறோம். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடியைக் கண்டிக்கிறோம். கர்நாடகத்தில் தேர்தல் வர இருக்கிறது. ஓட்டு வாங்குவதற்காகவே மோடி இந்த வேலையைச் செய்கிறார். தமிழக மக்களையும்,விவசாயிகளையும் வஞ்சிக்கும் பிரதமர் மோடியை வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்றார். பின்னர் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.  
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க