வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (28/01/2018)

கடைசி தொடர்பு:13:50 (10/07/2018)

"மனஅழுத்தமெல்லாம் எங்களுக்கு ரொம்ப சாதாரணம்!" - டாஸ்மாக் பணியாளர்களின் குமுறல்

" தினமும் நாங்கள் மன அழுத்தம்,மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். இதெல்லாம் எங்களுக்கு ரொம்ப சாதாரணமான விசயமாக இருக்கு"என்று தங்கள் பணி சார்ந்த சூழலையும் பிண்ணனியையும் விவரித்தார்கள் டாஸ்மாக் பணியாளர்கள்.


 

புதுக்கோட்டை நகரில் கடந்த குடியரசு தினத்தன்று, மாவட்ட நிர்வாகம் சார்பில், டாஸ்மாக் கடைகளில் வேலைப் பார்க்கும் ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் இலவச மருத்துவ முகாம் நடந்தது. புதுக்கோட்டை ஆயுதப்படை சமுதாயக் கூடத்தில் நடந்த இந்த மருத்துவ முகாமில், மருத்துவர்களும் டாஸ்மாக் அதிகாரிகளும் வியந்து போகும் அளவிற்கு, டாஸ்மாக் ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். வழக்கமாகத் தாங்கள் நடத்தும் மருத்துவ முகாம்போல் இதனைக் கடந்து போய்விட முடியாதபடி, அங்கு வந்திருந்த பணியாளர்களின் மனநிலை இருப்பதை சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கொஞ்ச நேரத்திலேயே உணர்ந்து விட்டார்கள். சிகிச்சை பெறவந்த டாஸ்மாக் ஊழியர்கள் சந்திக்கும் பெரும்பாலான பிரச்சனை மனரீதியிலான அழுத்தமாகவே இருந்திருக்கிறது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகளிடம் மருத்துவர்கள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

அதைப்பற்றி தெரிந்து கொள்ள டாஸ்மாக் கடைகளில் வேலைப் பார்க்கும் சிலரிடம் பேசினோம். "தினமும் ஆயிரம் விதமான மனிதர்களை நாங்கள் சந்திக்கிறோம்.போலீஸ் வாகனங்களுக்கு அடுத்து பாதுகாப்பு இரும்பு வலை பொருத்தி இருப்பது டாஸ்மாக் கடைகளுக்குத்தான்" என்று தங்களை அறியாமலேயே பணியிடம் சார்ந்த 'குறியீடு' விஷயத்தோடு பேச ஆரம்பித்தார்கள். "கூண்டுக்குள் இருந்து கொண்டுதான் வியாபாரம் செய்கிறோம். தினமும் நூறு விதமான மனநிலைக் கொண்ட மனிதர்களைச் சந்திக்கிறோம். உங்களுக்கெல்லாம் பிச்சைக்காரர்கள் என்றாலே, சில்லறைப் பிச்சைக்காரர்கள்தான் தெரியும்.டாஸ்மாக் கடைவாசலிலும் பார்களிலும் நாள் முழுக்க காத்துக்கிடந்து ஒரு கட்டிங் பிச்சை எடுத்து குடிக்கும் மகாராசன்களெல்லாம் இங்கே இருக்கிறார்கள்.

பொண்டாட்டியோட தாலி, குழந்தை காலில் போட்டிருக்கும் வெள்ளிக்கொலுசு இதெல்லாம் எடுத்துட்டு வந்து எங்ககிட்ட நீட்டி குவாட்டர் வேணும்னு 'அட்ராசிட்டி’ பண்ணுகிறவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் அதை வாங்குவதில்லை. நகைக் கடைகளிலும்  அதை வாங்க மாட்டார்கள். குடிப்பதற்குத்தான் நகையை விற்க முயற்சிக்கிறார்கள் என்பது நகைக் கடைக்காரர்களுக்கும் தெரியும். தீபாவளி, பொங்கல்,புதுவருடம் மாதிரியான பண்டிகைகள் எல்லோருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும். ஆனால், அந்தப் பண்டிகை நாட்கள் எங்களுக்குக் கடுமையான மன உளைச்சலைத்தான் தரும். காரணம், எங்களுக்குக் கொடுக்கப்படும் டார்கெட். இந்தப் பண்டிகை நாட்களில் விற்பனையை அதிகரித்துக்காட்ட வேண்டும் என்று எங்கள் அதிகாரிகள் டார்கெட் கொடுத்து விடுவார்கள். வேலையும் அதிகமாக இருக்கும். டார்கெட் டார்ச்சரும் அதிகமா இருக்கும்.

இந்த வேலையில் தினமும் மன உளைச்சலும் மன அழுத்தமும் ரொம்ப சாதாரண விசயம். உடலையும் மனதையும் பாதிக்கத்தான் செய்யுது.எல்லாவற்றையும் சகிச்சுகிட்டுதான் இருக்கிறோம். வேற வழியும் இல்லை. ஒரு வேண்டுகோள், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இப்படி எங்களுக்கென்று மருத்துவ முகாம் நடத்தினால் நன்றாக இருக்கும்" என்றனர் வேதனையுடன்.