"என்னைப்போல நீயும் ஆயிடக்கூடாதுல்ல!" குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து நெகிழ்ந்த மாற்றுத்திறனாளி

என்னைப்போல நீயும் ஊனமா ஆயிடக்கூடாதுல்ல. அதனால்,இந்தா இந்த சொட்டு மருந்தைக் குடி’’ என்று குழந்தை ஒன்றுக்கு மாற்றுத்திறனாளி ஒருவர் சொட்டு மருந்து கொடுத்த நெகிழ்வான சம்பவம் கரூர் மாவட்டத்தில் அரங்கேறி இருக்கிறது.

 

போலியோவை ஒழிக்கும் பொருட்டு, நாடு முழுவதும் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்படுகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டம் முழுவதும் இன்று (28.1.2018) காலை முதல் பல மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அப்படி கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் உள்ள லாலாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று காலை முதல் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. அந்த மையத்துக்கு வந்த சமூக ஆர்வலரும், மாற்றுத்திறனாளியுமான நாகராஜன், 'ஒரு குழந்தைக்கு நானும் சொட்டு மருந்து வழங்குகிறேன்' என்று கூறினார்.

செவிலியர்களும் அவருக்கு அனுமதியளித்தனர். அப்போது, தனது கைகளால் ஒரு குழந்தையை அணைத்து, அந்தக் குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுத்தார். அப்போது, கண்கலங்கியபடி, 'என்னைப்போல நீயும் ஊனமாயிடகூடாது. அதனால், இந்த சொட்டு மருந்தைக் குடி' என்று நா தழுதழுத்தப்படி அவர் கொடுக்க, சுற்றி நின்றிருந்த அனைவரும் கண்கலங்கினர்.

நாகராஜனிடம் பேசினோம். "லாலாப்பேட்டை, கள்ளப்பள்ளி பகுதிகளில் இன்று சொட்டு மருந்து வழங்க இருப்பதைப் பற்றி இரண்டு நாள்களாவே நான் மக்கள்கிட்ட விழிப்பு உணர்வு பண்ணினேன். இன்னைக்கு ஒரு குழந்தைக்கு என் கையால் சொட்டு மருந்து கொடுத்தேன். காரணம், என்னை என் வீட்டுல சின்னப் பிள்ளையில சரியாக கவனிக்காததாலதான், இப்படி நான் ஊனமாயிட்டேன். இதனால், இந்த சமூகத்தை எதிர்கொள்ள எவ்வளவு சிரமப்படுறேன்னு எனக்குதான் தெரியும். அதனால், என்னைப் போல எந்தக் குழந்தையும் போலியோவால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகதான் இந்தப் பகுதியில் சொட்டு மருந்து குறித்து விழிப்பு உணர்வை செய்ததோடு, எனது கையாலும் ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுத்தேன்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!