வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (28/01/2018)

கடைசி தொடர்பு:19:30 (28/01/2018)

’’ஓட்டுநர் மணிகண்டன் தீக்குளிப்பு தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!’’ - திருமாவளவன் கோரிக்கை

சென்னையில் ஓட்டுநர் மணிகண்டன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தினார். அத்துடன், இதில் தொடர்புடைய காவல்துறை அதிகாரியை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்து பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். 

திருமாவளவன்

நெல்லைக்கு வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ’’பேருந்துக் கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. அதனால், சாமனிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு  உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை முழுமையாகத் திரும்ப பெற வேண்டும். வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் ஜீயர் மற்றும் ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்.

விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் கர்நாடக அரசிடம் இருந்து காவிரி நீரைப் பெற்றுத் தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்தியில் ஆளும் மோடி அரசு, இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு தமிழகத்துக்கு தண்ணிர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசும் அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். 

இலங்கை அரசு. புதிதாகக் கொண்டு வந்துள்ள மீன்பிடிச் சட்டத்தால் தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். அதனால் தமிழக மீனவர்களுக்கு எதிரான இந்தச் சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இது தொடர்பாக ஐ.நா. மன்றத்தின் உதவியுடன் மத்திய அரசு இந்தச் சட்டத்தை நீக்க வலியுறுத்த வேண்டும். ஏற்கெனவே சிரமத்துக்கு உள்ளாகி வரும் தமிழக மீனவர்கள் இலங்கை அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தால் பெரும் துன்பத்துக்கு ஆளாவதில் இருந்து பாதுகாக்க வேண்டும். அதனால் காவிரி விவகாரம் மற்றும் இலங்கை கொண்டு வந்துள்ள சட்டம் பற்றி பிரதமரிடம் பேசி தமிழக முதல்வர் தீர்வு காண வேண்டும்.

சென்னையில் கால் டாக்சி ஓட்டுநர் மணிகண்டன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அதில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி மீதான விசாரணை திசை திருப்பப்படும் வாய்ப்பு உள்ளது. அதனால் இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் தொடர்புடைய காவல்துறை அதிகாரியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து பணி நீக்கம் செய்ய வேண்டும். ஓட்டுநர் மணிகண்டன் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிதி உதவியும் அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்’’ என்றார்.