வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (02/12/2012)

கடைசி தொடர்பு:11:51 (02/12/2012)

மாற்றுத்திறனாளிகள் நலமோடு வாழ அரசு பாடுபடும்: முதல்வர் வாழ்த்து

சென்னை, டிச. 2, 2012: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

அனைவரையும் இணைத்து எல்லோரும் எளிதில் அணுகக்கூடிய சமுதாயத்தை அனைவருக்கும் உருவாக்குவதற்கு உள்ள தடைகளை அகற்றுதல் என்னும் பொருளுடன்,  2012-ஆம் ஆண்டு "மாற்றுத் திறனாளிகள் தினம்'' உலகம் முழுவதும் டிசம்பர் திங்கள் 3-ஆம் நாள் அனு சரிக்கப்படுகிறது. 

இந்நாளில் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் தன்னம்பிக்கையும், சம வாய்ப்புகளும் பெற்று சமூகத்தில் உயர்ந்து நின்றிட,  கூடுதல் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள்; சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள்; சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் இடைநிற்றலைத் தவிர்க்க ஊக்கத் தொகை; பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்குக் குச்சிகள்; பார்வை குறைவுள்ள மாணவ, மாணவியருக்கு எழுத்துகளைப் பெரிதாகக் காட்டி சுயமாக படிக்க உதவும் கருவி; இயங்கும் வகையிலான செயற்கை அவயங்கள்; ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் மற்றும் முன்பருவ பள்ளிக்கு வந்து செல்லும் அனைத்து வகை மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் அவர்களுடைய துணையாளர்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணச் சலுகை.

செவித் திறன் குறையுள்ள மாணவ, மாணவியருக்கு காதொலிக் கருவி.  தமிழக அரசின் பசுமை வீடு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை  இந்தியாவிற்கே முன் மாதிரியாக தமிழகத்தில் எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று நிலைகளைப் பெறும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் ரொக்கப் பரிசு,  மாற்றுத் திறனாளிகளின் பராமரிப்பு உதவித் தொகை மற்றும் உணவூட்டுச் செலவினம் ஆகியவை  உயர்த்தப்பட்டுள்ளன.

மாற்றுத் திறனாளிகள் மன நிறைவோடு வாழும் வகையில், அவர்களின் முன்னேற்றத்திற்கான அனைத்து உதவிகளையும், ஏற்றமிகு திட்டங்களையும்,  உறுதியுடன் செயல்படுத்தி, மாற்றுத் திறனாளிகள்  சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக நலமோடும், வளமோடும் வாழ எனது தலைமையிலான அரசு தொடர்ந்து பாடுபடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்