எட்டு பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சுருட்டிய ’’கல்யாண மன்னன்’’ புருஷோத்தமன் கைது!

புருஷோத்தமன்

"இரண்டாவது திருமணம் என்கிற பெயரில் எட்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அந்த பெண்களிடமிருந்து கோடிக்கணக்கில் சுருட்டிக்கொண்டு பதுங்கிய 'கல்யாண மன்னன்' புருஷோத்தமன்  இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் வெள்ளலூரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். முதல் மனைவியை இழந்த புருஷோத்தமனுக்கு 57 வயது ஆகிறது. 20 வயதில் கீதாஞ்சலி என்ற மகள் இருக்கிறார். ட்ரான்ஸ்போர்ட் பிசினஸ் செய்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படும் புருஷோத்தமன்,  ‘இரண்டாவது திருமணம்’ என்கிற பெயரில் பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டியுள்ளார் என்ற தகவல் அண்மையில் வெளியானது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரால் புருஷோத்தமன் லீலைகள் அம்பலமானது. கோவை காந்திபுரத்தில் உள்ள மெட்டி ஒலி திருமணத் தகவல் மையத்தின் உரிமையாளர்களான வனஜாகுமாரியும்,மோகனும் தங்கள் மையத்தில் இரண்டாம் திருமணத்திற்காக பதிவு செய்திருந்த கணவரை இழந்த பணக்கார பெண்களை புருஷோத்தமனுக்கு அறிமுகம் செய்து வைத்து திருமணம் முடித்து வைத்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. மேலும், புருஷோத்தமன் மகள் கீதாஞ்சலியும் தனது தந்தைக்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. பெண்கள் ஒவ்வொருவரிடம், விதவிதமான பொய்களைக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த புருஷோத்தமன், போலீஸில்  புகார் அளிக்கப்பட்டதும்  தலைமறைவானார். காவல்துறையினர் தனிப்படை அமைத்து தொடர்ந்து தேடிக்கொண்டிருந்த நிலையில், புருஷோத்தமன் இன்று (28.1.2018) கைது செய்யப்பட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!