மதுரையில் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கூறிய அறிவுரை!

"ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டரும் கட்சிக்கு உண்மையாகவும் விசுவாசகமாகவும் இருந்தால் உயர்ந்த நிலைக்கு வரலாம்" என்று மதுரையில் நடந்த அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேரப்பிள்ளைகளின் காதணி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

குழந்தை செல்வம்

அவர் மேலும் பேசும்போது, " அ.தி.மு.க.வில் அடிமட்டத் தொண்டனாக இருந்து கட்சியை வளர்த்தவர் செல்லூர் ராஜு. எவ்வளவு செல்வம் இருந்தாலும் குழந்தைச் செல்வம்தான் சிறப்பானது. அந்தவகையில்செல்லூர் ராஜுவின் பேரன்களின் காதணி விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி" என்றார். துணைமுதலமைச்சர் ஓ.பி.எஸ்," செல்லூர் ராஜுவின் குடும்பத்தில் ஒருவனாக இந்த விழாவில் கலந்து கொள்கிறேன்" என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு அனைவரும் வியக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்திருந்தார் செல்லூர் ராஜு. இதற்காக பல கோடிகள் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பாண்டி கோயில் நுழைவு ப்பகுதியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்  செட் பெரிய அளவில் போட்டு அதில் ஜெயலலிதா, எடப்பாடி, ஓபிஎஸ்ஸின் பிரமாண்ட கட் அவுட்டுகளை வைத்திருந்தார்.

பிரமாண்டமாக இந்த காதணி விழாவை நடத்தி மதுரை மாநகரை அதிர வைத்துள்ளார் செல்லூர் ராஜு. இன்று (28.1.2018) முகூர்த்த நாள் என்பதால், மதுரை மாநகரில் பொதுவாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்படும். கூடுதலாக இந்த விழா நடந்ததால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அங்காங்கே  போக்குவரத்து மாற்றப்பட்டதால் செல்ல வேண்டிய விசேஷங்களுக்குச் செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர். பாண்டி கோயில் ரிங் ரோட்டில் பல மணி நேரம் வெளியூரிலிருந்து வரும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பல தனியார் பேருந்துகளும், வாகனங்களும் நீண்ட நேரம் சாலையிலயே காத்துக் கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மதுரை மாநகர் பேரப்பிள்ளைகளுடன் செல்லூர் ராஜு சிரித்துக்கொண்டிருக்கும் பேனர்களால் நிரம்பியிருந்தது. ஓ.பி.எஸ். நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்தார். ஆர்.பி. உதயகுமார் வைத்திருந்த விளம்பரங்களில் செல்லூர் ராஜு நடத்தும் விழாவைக் குறிப்பிடாமல் எடப்பாடி, ஓ.பி.எஸ்ஸை மட்டுமே வரவேற்றிருந்தார். காதணி விழாவை முதல்வர் மற்றும் அமைச்சர்களை அழைத்து இவ்வளவு பிரமாண்டமாக நடத்தி கட்சியினரிடம் தன் செல்வாக்கை காட்டினாலும், பொதுமக்களின் எரிச்சலலுக்கு வழக்கம்போல ஆளாகியுள்ளார் செல்லூர் ராஜூ.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!