வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (28/01/2018)

கடைசி தொடர்பு:14:29 (29/01/2018)

ஓ.பி.எஸ் ஆதரவாளர் மீது பொய் வழக்கு போடத் தூண்டுகிறார்! சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் மணிகண்டன்

அமைச்சர் மணிகண்டன் தூண்டுதலின் பேரில் அ.தி.மு.க கொடிக்கம்பத்தைச் சேதப்படுத்தியதாக ஓ.பி.எஸ் ஆதரவாளரான தன்மீது பொய் வழக்கு போடப்பட்டிருப்பதாக மாவட்ட மாணவரணி நிர்வாகி குற்றம்சாட்டியுள்ளார்.

அமைச்சர் மணிகண்டன் மீது ஓ.பி.எஸ் ஆதரவாளர் குற்றச்சாட்டு

ராமநாதபுரம் புளிக்கார தெருவில் வசித்துவருபவர் விஜயராமகிருஷ்ணன். அ.தி.மு.க மாவட்ட மாணவரணி பொருளாளர் பதவி வகித்து வரும் இவர், கட்சி இரு அணியாக செயல்பட்டபோது ஓ.பி.எஸ் அணியின் நகர பொறுப்பாளராக இருந்துள்ளார். இந்நிலையில், அமைச்சர் மணிகண்டன் தூண்டுதலின் பேரில் தன்மீது கட்சிக் கொடி கம்பத்தைச் சேதப்படுத்தியதாக பொய் புகார் கொடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக இவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து விஜயராமகிருஷ்ணனிடம் பேசினோம். ''எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் மணிகண்டன் கட்சி நிர்வாகிகளை அழைக்காமல் தனது ஆதரவாளர்களுடன் சென்று ராமநாதபுரம் நகரில் உள்ள 33 வார்டுகளிலும் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைக்காததால், நான் அதில் கலந்துகொள்ளவில்லை. மேலும், அமைச்சரின் நடவடிக்கைகள் பிடிக்காத நிலையில், அவரிடம் இருந்து ஒதுங்கியே இருந்துவந்தேன். இதனால் என்மீது வருத்தம் கொண்ட அமைச்சர் மணிகண்டன்,  எனது பகுதியான 21-வது வார்டில் ஏற்றப்பட்ட கட்சிக் கொடியை நான் சேதப்படுத்தியதாக, எனது தெருவில் வசிக்கும் மணிகண்டன் என்பவரது மூலமாக பொய்ப் புகார் கொடுக்க வைத்துள்ளார். 

இந்தப் புகாரை விசாரித்த கேணிக்கரை போலீஸார் என்மீது வழக்குப் பதிவு செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்தனர். இந்த வழக்கில் நான் பிணையில் வெளிவந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்டதாக, என்மீது மீண்டும் ஒரு பொய்ப் புகார் கொடுக்கப்பட்டது. இதனால், போலீஸார் என்னை அவமானப்படுத்தும் வகையில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதையறிந்த  மாவட்டச் செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் என்னைக் காவல் நிலையத்தில் இருந்து அழைத்துவந்தனர். தனக்கு வேண்டாதவர் என்ற காரணத்துக்காக சொந்தக் கட்சிகாரர் மீதே வழக்குப் போட தூண்டிய அமைச்சர் மணிகண்டனின் செயல்குறித்து கட்சித் தலைமையிடம் புகார் செய்ய உள்ளேன்'' என்றார். மாற்றுக் கட்சிக்காரர்கள், மாவட்ட அதிகாரிகள் என அனைவருடனும் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் அமைச்சர் மணிகண்டன், தற்போது சொந்தக் கட்சிக்காரர் மீதே பொய்ப் புகார் கொடுத்திருப்பது ராமநாதபுரம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.