டெங்கு ஒழிப்புப் பணியில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்: நெல்லை ஆட்சியர் எதிர்பார்ப்பு! | Public support is important to eradicate dengue mosquitos, says Collector

வெளியிடப்பட்ட நேரம்: 01:35 (29/01/2018)

கடைசி தொடர்பு:08:22 (29/01/2018)

டெங்கு ஒழிப்புப் பணியில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்: நெல்லை ஆட்சியர் எதிர்பார்ப்பு!

டெங்கு தடுப்புப் பணியில் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே முழுமையாகத் தடுக்க முடியும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். அதனால் சுகாதாரப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

டெங்கு ஒழிப்பு பணி

நெல்லை மாவட்டத்தில் டெங்கு ஒழிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. டெங்கு கொசுக்கள் உருவாவதைத் தடுக்கும் வகையில், சுகாதாரத்தை மேம்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் சுகாதாரப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்காக 500 பணியாளர்களைக் கொண்டு மெகா தூய்மைப் பணியும் கொசு ஒழிப்புப் பணிகளும் நடைபெற்றன. இதை நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று பார்வையிட்டார். அத்துடன், கடையநல்லூர் பகுதியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்களையும் நேரில் ஆய்வுசெய்தார். கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 60 இடங்களில் இந்த மெகா தூய்மைப் பணிகள் நடைபெற்றன. 

பின்னர், ஆட்சியர் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ஆட்சியர், காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் தினமும் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அத்தகைய பகுதிகளில் சுகாதாரத்தைப் பாதுகாக்க கூடுதல் பணியார்களை நியமிக்க உத்தரவிட்ட அவர், கல்லூரி மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் கேட்டுக்கொண்டார். 

சிறப்பு மருத்துவ முகாம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ’’கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 246 கொசு ஒழிப்புப் பணியாளர்கள், 170-க்கும் அதிகமான துப்புறவுப் பணியாளர்கள், 40-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களைக்கொண்டு, காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூய்மை மற்றும் கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். வீடுகளில் சேகரித்து வைக்கும் தண்ணீரை மூடி வைக்க பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளோம். சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தேவைப்படும் இடங்களில் கூடுதல் குப்பைத் தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சுகாதாரப் பணிகளை ஆய்வுசெய்ய மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், கோட்டாட்சியர்கள் மற்றும் துணை ஆட்சியர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வருகை தரும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொசு ஒழிப்புப் பணிகள் முழுமை பெறமுடியாது. அதனால் அனைவரும் இணைந்து இந்தப் பணிகளைச் செய்ய வேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார்.