வெளியிடப்பட்ட நேரம்: 02:40 (29/01/2018)

கடைசி தொடர்பு:13:31 (10/07/2018)

காகித ஆலைக்குச் சொந்தமான குளம் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது..! ஆடுகள், கோழிகள் மாயம்

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காகிதபுரத்தில் இயங்கிவரும் டி.என்.பி.எல் ஆலை நிர்வாகம் வெட்டிய குளம் உடைந்து அதில் பத்து ஆடுகளும், நூற்றைம்பது கோழிகளும் அடித்துச் செல்லப்பட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். 

 

டி.என்.பி.எல் காகித ஆலை நிர்வாகம் தண்ணீர் தேவைக்காக காவிரியில் இருந்து நீர் எடுக்கிறது. தவிர, ஆலை வளாகத்திற்குள்ளாகவே ராட்சத போர்வெல்களைப் போட்டு தண்ணீர் எடுத்துப் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், அந்தத் தண்ணீரை தேக்குவதற்காக பிரமாண்டமான குளத்தை சமீபத்தில் வெட்டி இருக்கிறது ஆலை நிர்வாகம். அந்தக் குளத்தில் தண்ணீரைத் தேக்கி வைத்துள்ளது. அந்தக் குளம் இன்று விடியற்காலை உடைந்து தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள கிராமத்துக்குள் புகுந்திருக்கிறது.

இந்தத் திடீர் வெள்ளத்தில் பத்து ஆடுகளும், கோழிப் பண்ணை ஒன்றில் இருந்த 150 கோழிகளும் தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டதாக பொதுமக்களால் குற்றம்சாட்டப்பட்டது. இப்படி ஒரு சம்பவத்துக்குக் காரணமான டி.என்.பி.எல் ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து, இன்று கந்தசாமிபாளையம் அருகே பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர்.

இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆலை நிர்வாகமும், காவல்துறையும், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், 'பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தருவதாக சொன்னபிறகே மறியல் கைவிடப்பட்டது.  இதுபற்றி, நம்மிடம் பேசிய அந்தப் பகுதி மக்கள், 'டி.என்.பி.எல் ஆலை தொடர்ச்சியாக எங்கள் வாழ்வாதாரத்தை அழிப்பதையே தொழிலா வச்சுருக்கு.

ஆலைக் கழிவு நீரை பாசன வாய்க்கால்களில் திறந்துவிட்டு, 3000 ஏக்கர்ல நடந்த விவசாயத்தை அழிச்சுட்டு. அதோடு, விதிமுறைகளை மீறி ராட்சத போர்வெல்களைப் போட்டு இந்தப் பகுதி நிலத்தடி நீரை அதலபாதாளத்துக்கு அனுப்பிட்டு இப்போ விதிமுறைகளை மீறி இவ்வளவு பெரிய குளத்தை வெட்டி உடைக்க விட்டு நாங்க வளர்த்த கால்நடைகளை காலி பண்ணிட்டாங்க. உரிய நிவாரணம் தரலன்னா போராட்டம்தான்" என்றார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க