மகுதுப்பட்டி அந்தோணியார் சப்பரத் திருவிழா - மும்மதத்தினரும் பங்கேற்பு

மகுதுப்பட்டி தூயவனத்து அந்தோணியார் ஆலயத் திருவிழா வண்ணமயமான சப்பர பவனியுடன் நேற்று (28.01.2018.) நிறைவுப் 
பெற்றது. இதில் கிறிஸ்துவர்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள சகோதர மதத்தினரும் திரளாகக் கலந்துகொண்டனர். ' நம்ம ஊர்' திருவிழா என்ற உணர்வு பொங்க, மும்மதத்தினரும் கலந்துகொண்ட இத்திருவிழாவில் சந்தோஷ உணர்வுகள் பொங்கி வழிந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள மகுதுப்பட்டியில் தூய வனத்து அந்தோணியர் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் தேர்த் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மூன்று நாள்கள் நடந்த இந்தத் திருவிழாவில் நேற்றைக்கு முந்தைய நாள் (27.01.2018) வாணவேடிக்கை, கிராமிய இசை, பாரம்பர்ய மேளதாளம் மற்றும் வழக்கமான பேண்டு வாத்தியங்கள் அதிர தேர்ப் பவனி நடந்தது. கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சுற்றிவந்த சப்பரங்கள் நேற்று காலை (28.01.2018) அந்தோணியார் ஆலயத்தை வந்தடைந்தது. 

அதைத்தொடர்ந்து பங்குத்தந்தைகள் அந்தோணி பால்ராஜ், இலுப்பூர் பங்குத்தந்தை சகாயராஜ் ஆகியோர் தலைமையில் திருப்பலி நடந்தது.
இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் திரளானவார்கள் கலந்துகொண்டனர். கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்தவருடம் ஏராளமான பொதுமக்கள் இந்த ஆலயத்திருவிழாவில் கலந்துகொண்டதையும் இந்தச் சிறு கிராமத்தில் உள்ள சிறு ஆலயத்தின் வருடாந்திர திருவிழா பெரிய ஆலயங்களுக்கு நிகராக நடைபெற்றதையும் மகுதுப்பட்டி கிராம மக்கள் ஆச்சர்யம் பொங்கப் பேசிக்கொண்டார்கள். தவிர, எங்கெல்லாம் திருவிழாக்கள் நடக்கிறதோ, அங்கெல்லாம் கடை போடுகிற கடைக்காரர்கள், இந்தவருடம் மகுதுப்பட்டி அந்தோணியார் திருவிழாவில் தாங்கள் எதிர்பார்த்ததைவிட வியாபாரம் சிறப்பாக இருந்ததாக மகிழ்ச்சி பொங்கும் குரலில் கூறினார்கள்.

இந்தக் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் வேலை செய்கிறவர்களாக இருக்கிறார்கள். சிறுவயதில் தாங்கள் கண்டுபரவசப்பட்ட ஊர்திருவிழாவையும் தேர் பவனியையும் இப்போதும் அவர்களால் பார்த்துப் பரவசப்படமுடிந்தது. வெளிநாட்டில் வேலைப் பார்ப்பவர்களின் உறவினர்களோ அல்லது அவர்களது நண்பர்களோ ஆண்ட்ராய்டு போனில் தங்கள் ஊர் திருவிழாவினை வீடியோ எடுத்து அவர்களுக்கு அனுப்பிய நிகழ்வுகளையும் மகுதுப்பட்டியில் காணமுடிந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!