சுவர் விளம்பரம் செய்வதில் தகராறு..! டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி அணிகளுக்குள் தள்ளுமுள்ளு

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று (29.01.2018) டி.டி.வி.தினகரனை அழைத்துவந்து நடத்த இருந்த எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்துக்கு நகராட்சி நிர்வாகமும், காவல்துறையும் இன்னமும் அனுமதி தரவில்லை. இந்நிலையில், சுவற்றில் விளம்பரம் எழுதுவது தொடர்பாக முதலமைச்சர் அணியும் டி.டி.வி.தினகரன் அணியும் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கரூர் நகரத்தில் உள்ள திருவள்ளுவர் விளையாட்டரங்கில் டி.டி.வி.தினகரனை அழைத்துவந்து இந்தப் பொதுக்கூட்டத்தை நடத்த செந்தில்பாலாஜி ஏற்பாடு செய்தார். ஒரு வாரத்துக்கு முன்பே கரூர் நகர டி.எஸ்.பி கும்மராஜாவிடமும், நகராட்சி கமிஷனர் அசோக்குமாரிடமும் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தார். ஆனால், இருவரும் அனுமதி தர மறுத்துவிட்டனர். இதனால், செந்தில்பாலாஜி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை நாடினார். அங்கே 27, 28, 29 ஆகிய மூன்று நாளும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக திருவள்ளுவர் மைதானத்தை தர அனுமதிக்க வேண்டும் என்று அனுமதி கிடைத்தது. அந்த நகலை டி.எஸ்.பி மற்றும் நகராட்சி ஆணையரிடம் செந்தில்பாலாஜி காட்டியும் அவர்கள் அனுமதி தரவில்லை. இதனால் அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார். அந்த வழக்கு வரும் 31-ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.

 

இது ஒருபக்கம் இருக்க விழா நடக்க அனுமதி கிடைக்காவிட்டாலும் அந்த விழா தொடர்பான சுவர் விளம்பரங்களை கரூர் மாவட்டம் முழுவதும் செய்து வருகிறது செந்தில்பாலாஜி தரப்பு. சிலநாள்களுக்கு முன்பு வெங்கமேடு பகுதியில் சுவர் விளம்பரம் செய்த தனது ஆதரவாளர்களை காவல்துறைத் தடுப்பதாக செந்தில்பாலாஜி புகார் தெரிவித்தார்.

நேற்று வெங்கமேடு ரயில்வே மேம்பாலம் அருகே விளம்பரம் செய்த பெயின்டர்களை போலீஸ் அடித்து உதைத்ததாக அதே பகுதியில் தனது ஆதரவாளர்களோடு போய் சாலை மறியல் செய்து கைதாகி மாலை விடுதலையானார். இந்நிலையில், இன்று மதியம் திருமாநிலையூர் பகுதியில் செந்தில்பாலாஜி தரப்பு சுவர் விளம்பரம் செய்ய முயன்றது. அப்போது அங்கே கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ கீதா தலைமையில் வந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு ஆட்களிடம், "இது அம்மா பிறந்தநாள் விழா சம்பந்தமாக நாங்க விளம்பரம் பண்ண ரிசர்வ் பண்ணி வச்சுருக்கும் சுவர். இங்கே நீங்க எப்படி விளம்பரம் பண்ணலாம்?" என்று கேட்டார்கள். இதனால், இருதரப்புக்கும் வாக்குவாதமாகி, தள்ளுமுள்ளானது. அதற்குள், கரூர் நகர டி.எஸ்.பி கும்மராஜா தலைமையில் போலீஸார் குவிந்து இருதரப்பையும் சமாதானப்படுத்தினார்கள். இதனால், அங்கே ஏற்பட இருந்த சண்டை தடுக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!