ஏற்றும்போது நூறுன்னு உயர்த்துறாங்க; குறைக்கும்போது ஒரு ரூபாயா?- மறியலில் கொந்தளித்த தி.மு.க-வினர்

பேருந்துக் கட்டணம் உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.க சாலை மறியல்,

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பாக தி.மு.க எம்.எல்.ஏ பெரியண்ணன் அரசு தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுப் பேருந்துக் கட்டண உயர்வை முழுமையாக ரத்துசெய்ய வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டத்தை தி.மு.க-வும் அதன் தோழமைக் கட்சிகளும் தற்போது நடத்திவருகின்றனர். அந்தவகையில், புதுக்கோட்டை நகரில் உள்ள புதிய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று காலை 9 மணிக்கு மறியல் போராட்டம் தொடங்கியது.

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையத்தின் முகப்பில் அமர்ந்து, அரசுக்கு எதிராகவும் மக்களை பெரிதும் வதைக்கும் பேருந்துக் கட்டண உயர்வை முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினார்கள். இதனால், பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் வேலைக்குச் செல்லும் பொதுமக்களும் அழைக்காமலேயே இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினார்கள். இதைப்பார்த்த தி.மு.க-வினரும் அதன் தோழமைக் கட்சியினரும் உற்சாகமடைந்துவிட்டார்கள். பொதுமக்களில் சிலர், பெரியண்ணன் அரசுவிடம்.. ``விலையை ஏற்றும்போது ஐம்பது, நூறுன்னு உயர்த்துறாங்க. குறைக்கும்போது ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்னு குறைக்குறாங்க. இது ஏதோ கண்துடைப்பு விலைக் குறைப்பு மாதிரி இருக்குங்கய்யா" என்று முறையிட்டார்கள். எம்.எல்.ஏ.வும் "கவலைப்படாதீங்க. உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை முழுமையாக வாபஸ் வாங்கணும்னுதான் இந்தப் போராட்டத்தையே தி.மு.க நடத்துது. கண்டிப்பா நல்லது நடக்கும்" என்று கூறிக்கொண்டிருந்தார். அவர் பேசும்போது, " தி.மு.க தலைமையிலான இந்த சாலை மறியல் போராட்டத்தில் பொதுமக்களும் தாமாகவே முன்வந்து கலந்துகொள்கிறார்கள்.
இந்தச் செயலே, மக்கள் விரோத நடவடிக்கையாக இந்தப் பஸ் கட்டணம் உயர்வு இருக்கிறது என்பதை சொல்லாமலேயே எல்லோருக்கும் உணர்த்தியிருக்கிறது. அரசும் இதை உணர்ந்து கட்டண உயர்வை முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!