``பிச்சை எடுப்பதும் ஒரு தொழில்தான்!” மோடியைச் சாடிய சிதம்பரம்… மீண்டும் காங்கிரஸைக் கலாய்த்த பா.ஜ.க!

ப. சிதம்பரம்

வார்த்தைப் போர் என்பது அரசியல் நிகழ்வுகளில் ஒன்றுதான். பல சமயங்களில் அது வெறும் கருத்து பரிமாற்றங்களாகப் பார்க்கப்பட்டாலும், ஒரு சில தருணங்களில் அது ஒரு சாரரை பாதித்துவிடுவதும் இயற்கைதான். ஆனால், அப்படிப்பட்ட உள்நோக்கங்கள் எதுவும் இல்லாமல், ஓர் உவமைக்காக, விளக்கம் அளிப்பதற்காக அல்லது எதிர்த்துக் கேள்வி கேட்பதற்காகப் பேசப்படும் வாக்கியங்களை வைத்து ஒரு தரப்பு அரசியல் செய்வது சற்றே துரதிர்ஷ்டவசமானது. அப்படி ஒன்றுதான் தற்போது அரங்கேறியுள்ளது.

பிரதமர் மோடி ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில், “பக்கோடா விற்பவர்கள் ஒரு நாளைக்கு 200 ரூபாய் வரை சம்பாதிருக்கிறார்கள். அதுவும் ஒரு வேலை தானே. அதைச் செய்பவர்களுக்கு வேலையில்லை என்று எப்படி கணக்கில் கொள்ள முடியும்” என்று கேள்வியெழுப்பினார்.

சிதம்பரம் ட்வீட்

“என்னென்ன வேலைவாய்ப்புகளை அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது எனக் கேட்டால், நம் பொது அறிவைக் கலாய்க்கும் வண்ணம் பதில் வருகிறது. இன்னமும் வரும், தயாராக இருங்கள். தொழில் முனைவோருக்கும் வேலை செய்வோருக்கும் உண்டான வித்தியாசத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதற்குப் பதிலளித்துள்ளார்.

மேலும், “பிரதமரின் கூற்றுபடி, பக்கோடா விற்பது ஒரு வேலைதான். அப்படிப் பார்த்தால், பிச்சை எடுப்பதும் ஒரு தொழில்தானே. ஊனத்துடன் பிச்சை எடுப்பவர்களையும் வேறு வழியின்றி கையேந்துபவர்களையும் வேலையுள்ளவர்கள் என்ற பட்டியலில் சேர்க்க முடியுமா. உண்மையான வேலைவாய்ப்பு என்பது உறுதியானது; நிரந்தரமானது; முக்கியமாகப் பாதுகாப்பானது! அப்படி எத்தனை வேலைவாய்ப்புகளை இந்த அரசு உருவாக்கியிருக்கிறது என்பதைத் தெரிவிப்பார்களா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ.க ட்வீட்

இதைப் பார்த்த பா.ஜ.க தரப்பு, “ஏழை மற்றும் முன்னுக்கு வரத் துடிக்கும் இந்தியர்களைக் காங்கிரஸ் கட்சி மீண்டும் கிண்டல் செய்துள்ளது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளது. வார்த்தைப் போர், அதன் அரசியல் ஒருபுறம் என்றாலும், ப.சிதம்பரம் கேட்கும் கேள்விக்குப் பா.ஜ.க-வின் பதில் என்னவோ?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!