பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல் - கைது!

தமிழக அரசு உயர்த்தியுள்ள பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் இன்று சாலை மறியல் செய்தனர். அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

கோவை

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பீளமேட்டில், கோவை தி.மு.க தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.

bus fair hike

அதேபோல, காந்திபுரம் தமிழ்நாடு  ஓட்டல் முன்பு, கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில், மறியல்  போராட்டம் நடைபெற்றது. இதில், 200 க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.

மேலும், காந்திபுரம் அண்ணா சிலை அருகே தி.மு.க சொத்து பாதுகாப்புக் குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.

திருச்சி

மத்திய பேருந்து நிலையத்தின் நுழைவாயில் அருகில் மற்றும் தந்தை பெரியார் சிலையின் அருகே திரண்ட தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சியின் தொண்டர்கள், முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பெரியசாமி, முன்னாள் துணை மேயர் அன்பழகன், காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்டத் தலைவர்கள் கோவிந்தாஜ், ஜவஹர், திருச்சி கலை, வழக்கறிஞர் சரவணன், முன்னாள் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஸ்ரீதர், வெற்றிசெல்வன், சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் கே.என் அருள் ஆகியோர் தலைமையில்  அக் கட்சிகளின் தொண்டர்களும் கலந்துகொண்டனர். மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையாக நின்று கொண்டிருந்தது. அதையடுத்து போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள், வாசவி கல்யாண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 28 இடங்களில் தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் மறியல் செய்து கைதுசெய்யப்பட்டனர். 
காளையார்கோவில் பஸ் நிலையத்தில் தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் மேப்பல்சக்தி, மார்த்தாண்டன் தலைமையில் சாலை மறியில் நடைபெற்றது. மறியல் செய்த 150 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் அருகில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிஅம்பலம் தலைமையில் 200க்கும் மேற்பட்ட தி.மு.க-வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைப் போலீஸார் கைதுசெய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர். செம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் - தேனி சாலையில் சாலை மறியல் செய்தபோது கைதுசெய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் எம்.எல்.ஏ கீதாஜீவன் தலைமையில் தி.மு.க கூட்டணிக் கட்சியினர் தூத்துக்குடி காமராஜர் காய்கனி மார்க்கெட் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் நடைபெற்ற சாலை மறியலில் 1,500 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

தேனி

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை அம்பேத்கார் சிலை முன்பு தேனி- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் தி.மு.க நகரச் செயலாளர் அபுதாகீர்  தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இதேபோல், ஆண்டிபட்டி, கம்பம், சின்னமனூர், பாளையம் ஆகிய பகுதிகளிலும் மறியல் நடைபெற்றது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கீழ்ப்பாலத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் ஆர்.முத்தரசன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா உட்பட ஏராளமானோர் கைதுசெய்யப்பட்டனர்.

திருவாரூர் பேருந்து நிலையம் அருகே திருவாரூர் தி.மு.க நகரச்செயலாளர் பிரகாஷ் தலைமையில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். 

நாகை

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கிட்டப்பா அங்காடி மற்றும் சித்தர்காடு பகுதியில் தி.மு.க-வினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் சாலை மறியல் செய்தனர். அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். 

கரூர் 

கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் தி.மு.க மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் நடந்த சாலை மறியலில் கூட்டணிக் கட்சியினர் 1,600 பேர் கலந்துகாெண்டனர். அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

ராமநாதபுரம் 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், திருவாடானை, கமுதி உள்ளிட்ட 26 இடங்களில் சாலை மறியல் செய்த தி.மு.க, காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த 2,550 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சின்னஞ்சிறு கிராமத்தில் நடந்த சாலை மறியலில் பொதுமக்களும் தி.மு.க-வுடன் இணைந்து ஈடுபட்டனர். அரிமளம் என்ற கிராமத்தில் நடந்த சாலைமறியலில் இதுபோன்ற நிகழ்வை இன்று காண முடிந்தது.

அதுபோல், சிறு விவசாயிகள் நிரம்பிய பகுதியான பொன்னமராவதி பகுதியில் நடந்த சாலை மறியலில் பொதுவான விவசாயிகள் கலந்துகொண்டதையும் பார்க்க முடிந்தது. "தங்களை தினமும் நேரடியாக பாதிக்கும் விஷயமாக இருக்கும் இந்தப் பேருந்துக் கட்டண உயர்வு இருப்பதால், எங்களது எதிர்ப்பு உணர்வைத் காட்டுவதற்காக கட்சிகள் நடத்திய சாலை மறியலில் நாங்களும் ஈடுபட்டோம்" என்றனர் கலந்துகொண்ட பொதுமக்கள்.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் 13 இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. அரியலூரில் திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில் போரட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் 2,800க்கும் பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை

நெல்லையில், மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் தலைமையில் எதிர்க்கட்சியினர் கொக்கிரகுளம் தாமிரபரணி பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். கிழக்கு மாவட்டச் செயலாளரான முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் அம்பாசமுத்திரத்திலும் மேற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் பாவூர்சத்திரம் காமராஜர் சிலை முன்பாக சாலைமறியலில் ஈடுபட்டு கைதாகினர். நெல்லை மாவட்டம் முழுவதும் 25 இடங்களில் மறியல் நடைபெற்றது. இதில், 3,500 பேர் கைதானார்கள்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில் 200 க்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் செய்தனர். மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 900க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!