குற்றாலத்தில் திடீர் தீ விபத்து: மூலிகைக் கடைகள் எரிந்து சேதம்!

குற்றாலத்தில் சீசன் முடிவடைந்த நிலையில் இன்று  திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் மூலிகைக் கடை உள்ளிட்ட 4 கடைகள் எரிந்து சாம்பலாயின. தீயணைப்புப் படையினர் கடும் முயற்சிக்குப் பின்னர் தீயை அணைத்தனர்.

தீ விபத்து

நெல்லை மாவட்டத்தில் மே மாதத்தில் தொடங்கும் குற்றாலம் சீசன், ஜூலை வரை நீடிக்கும். இந்த ஆண்டு தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக டிசம்பர் இறுதி வரையிலும் சீசன் நீடித்தது. தற்போது அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ள போதிலும், பொதுமக்களும் ஐயப்ப பக்தர்களும் குற்றாலத்துக்கு வருகை தருகின்றனர். சீசனுக்காக குற்றாலநாதர் கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமான இடத்தில் குத்தகை அடிப்படையில் நூற்றுக்கணக்கான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தக் கடைகளில் மூலிகைப் பொருள்கள், மூலிகை எண்ணெய், துணி வகைகள், உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், வடக்கு சன்னதி தெருவில் உள்ள கடைகளில் இன்று திடீரென தீப்பற்றியது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் வாகனங்களில் விரைந்து சென்றனர். ஆனால், கோயிலின் வடக்கு சன்னதி தெருவுக்கான கதவு அடைக்கப்பட்டிருந்ததால், வாகனம் வருவதற்குத் தாமதம் ஏற்பட்டது. அதற்குள் தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது. 

அந்தப் பகுதியில் இருந்த 4 கடைகள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில், கடைகளில் இருந்த மூலிகைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. சேத மதிப்பு பல லட்சம் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சீசன் முடிவடைந்த காரணத்தால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதனால், பெரும் பொருள் சேதமும் உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது.  

இதனிடையே நெல்லை, பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினர் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம் அடைந்தன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!