செய்தியை உடனுக்குடன் வாட்ஸ் அப்பில் அனுப்பிய நித்தியானந்தா சீடர்! அதிரடி காட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி

மதுரை ஆதீன மடத்தின் 293 வது இளைய மடாதிபதி விவகாரத்தில் பிப்ரவரி 2-ம் தேதிக்குள் பதில் மனுத்தாக்கல் செய்யாவிட்டால், கைது செய்ய உத்தரவிட நேரிடும் என்று நித்தியானந்தாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மதுரை ஆதீன மடத்தின் 293 வது இளைய மடாதிபதியாக நித்தியானந்தா செயல்படத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜெகதலபிராதாபன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். பாலியல் புகார்களில் சிக்கி சிறை சென்றிருக்கும் நித்தியானந்தா மதுரை ஆதீன மடத்தின் மடாதிபதியாகச் செயல்படுவது ஏற்புடையதல்ல என்றும், அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் நித்தியானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் மதுரை ஆதீன மடத்தின் 293 வது இளைய மடாதிபதியாக, தான் பதவியேற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டிருந்தார். இதைக் கடந்த செப்டம்பர் மாதம் விசாரித்த நீதிபதி, மடாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டேன் என்பதை மாற்றி, புதிதாக 2018-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதிக்குள் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த மனு கடந்த 3-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது பதில் மனுத்தாக்கல் செய்ய நித்தியானந்தா தரப்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் அளித்து நீதிபதி வழக்கை இன்றைக்கு (29.1.2018) ஒத்திவைத்திருந்தார்.    

நீதிபதி மகாதேவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது வழக்குகளை விசாரித்து வருகிறார். அவர் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நித்தியானந்தா தரப்பில் மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அந்தக் கோரிக்கைகளை நிராகரித்த நீதிபதி மகாதேவன், ``நீதிமன்றத்தை மதிக்காமல் 2,000 ஆண்டுகள் பழமையான ஆதீனத்தை நித்தியானந்தா கொச்சைப்படுத்துகிறார். நித்யானந்தா ஆசிரமத்துக்கு எதிராகப் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக பிப்ரவரி 2-ம் தேதிக்குள் பதில் மனுத்தாக்கல் செய்யாவிட்டால், கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிட நேரிடும்’’ என்று எச்சரித்து, வழக்கை ஒத்திவைத்தார். வழக்கு விசாரணையின்போது நீதிமன்ற உத்தரவுகளைச் செல்போனில் வாட்ஸ் அப் மூலமாக யாருக்கோ அனுப்பிக் கொண்டிருந்த நித்தியானந்தா சீடர் ஒருவரைக் கைது செய்து, அவரது செல்போனையும் பறிமுதல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கும் நீதிபதி உத்தரவிட்டார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!