`ஓ.பி.எஸ்-ஸிடம் இருப்பவர்களிடம் பேசுங்கள்' - கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் தடாலடி பேச்சு

தேனியில் தனியார் திருமண மகாலில் நடந்த அ.தி.மு.க அம்மா அணி செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய தங்கத் தமிழ்ச்செல்வன், ``இன்றைக்கு நடக்கும் செயல்வீரர்கள் கூட்டம் தமிழ்நாட்டில் முதல்முறை. அ.தி.மு.க, அவர்கள் பக்கம்தான் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தொண்டர்கள், நிர்வாகிகள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் கூட்டம் இது. நான் மண்டபத்துக்கு வர ஒரு மணி நேரம் ஆனது.

இதுதான் உண்மையான அ.தி.மு.க.  டி.டி.வி.தினகரனால் ஆட்சிமாற்றம் உறுதி. எட்டு மாதம் கழித்து, ஆர்.கே.நகர் தேர்தலில் தோற்றப்பிறகு மாவட்ட நிர்வாகிகளை நீக்குகிறீர்கள். நீங்கள் தோற்றதற்கு நாங்களா பொறுப்பு? தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள். தோற்ற பிறகு சமாதானத்துக்கு வந்தால் சரியாக இருக்கும். அதை விட்டுவிட்டு எங்களைச் சிறையில் தள்ளுவோம் என்கிறீர்கள். ஓ.பன்னீர்செல்வத்தைக் கட்சியில் இருந்து சசிகலா நீக்கி பல நாள்கள் ஆகிவிட்டது. எங்களை நீக்க உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது?

பி.ஜே.பி-க்கு அடிபணிந்து நடக்கிறது ஆளும் அரசு. நடக்க இருக்கும்  உள்ளாட்சித் தேர்தலில் குக்கர் சின்னத்தைக் காட்டினால் நூறு சதவிகிதம் எங்களுக்குத்தான் வெற்றி. அமைச்சர்கள் இனி வாக்கு கேட்டு தொகுதிக்குள் சென்றால் என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள். நீதிமன்றத்தில் இருக்கும் தகுதி நீக்க வழக்கு எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தால், நீங்கள் சட்டசபை செல்லலாம் என்று தீர்ப்பு வந்தால் தனியாகச் செல்லும் டி.டி.வி.தினகரனுடன் நாங்கள் 18 பேரும் சேர்ந்து சட்டசபை செல்வோம். இன்னும் சில தினங்களில் ஒவ்வொரு தொகுதிக்கும், ஒவ்வொரு ஊருக்கும் சென்று மக்களைப் பார்க்க இருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து டி.டி.வி.தினகரன் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டிருக்கிறார். ஆனால், அதற்கு அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன். அ.தி.மு.க அம்மா அணியாகிய எங்களுக்கு ஒரு சின்னம் ஒதுக்குங்கள் என்று கேட்கிறோம். அது போதும். சசிகலாவின் ஆலோசனைக்குப் பிறகு புதிய கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். பன்னீர்செல்வத்திடம் இருக்கும் நிர்வாகிகளிடம் பேசுங்கள். நம்மிடம் வரச் சொல்லுங்கள். ஆட்சி தினகரன் கைக்கு வரும் என்று சொல்லுங்கள். வந்தால் அதே இடத்தில் அந்த நிர்வாகிகள் இருக்கட்டும். இல்லாவிட்டால் போகட்டும். புதிய நிர்வாகிகளை நியமித்து தேர்தலை சந்திப்போம்" என்றார். இதன்பின்னர் புதிய நிர்வாகிகள் சேர்ப்பதற்கான படிவம் கூட்டத்தில் விநியோகிக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!