போஸ்டரில் இருந்த நம்பரில் பேசி வழக்குப்பதிந்த போலீஸ்! மிரண்டுபோன குடும்பம்

பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பின் சார்பாகப் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக ஒட்டப்பட்ட அந்தப் போஸ்டர்களில் இருந்த போன் நம்பரில் பேசிய காவல்துறையினர், அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அவர்களின் குடும்பத்தினரையும் காவல்துறையினர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சப்பாணி என்பவர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில், “நான் மதுரை சமயநல்லூர் பகுதியைச் சார்ந்தவன். விவசாயம் செய்துவருகிறேன். இந்நிலையில் என் மகன் முத்து செல்வம் உள்ளிட்ட சிலர் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பின் கீழ் பேருந்துக் கட்டணத்துக்கு எதிராகப் போஸ்டர் ஒட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக என் மகனைக் கைது செய்ய நள்ளிரவு 1.30 மணிக்கு எங்கள் வீட்டுக்கு வந்த சமயநல்லூர் காவல்துறை ஆய்வாளர் முத்துப்பாண்டி, சார்பு ஆய்வாளர் விஜயபாஸ்கர், காவலர்கள் பார்த்திபன், ரங்கராஜன் ஆகிய போலீஸ் அதிகாரிகள் எனது வீட்டைத் தட்டி தகாத வார்த்தைகளைப் பேசி திட்டினார்கள். கேட் முடியாத வார்த்தைகளைப் பேசினார்கள்.

வழக்கறிஞரைத் தொடர்புகொண்டு வரவைத்தோம். அவர் வந்து புகார் தொடர்பாக விசாரித்ததற்கு வழக்கறிஞர் தேனூர் ராஜாவைக் கெட்ட வார்த்தையில் பேசியும் தாக்கினார்கள். மேலும், அவரது தொலைபேசியையும் பைக் சாவியையும் பறித்து வைத்துக்கொண்டனர். எனவே, எனது வீட்டுக்கு நடு இரவில் வந்து சட்ட விரோதமாக கலவரம் செய்து தகாத வார்த்தைகளால் பேசி என் மனைவி மீது பொய் வழக்குப் போடுவதாக மிரட்டிய மற்றும் எங்களைக் கடும் உளைச்சலுக்கும் பீதிக்கும் ஆளாக்கிய சமயநல்லூர் காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், காவலர்கள் உள்ளிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!