வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (29/01/2018)

கடைசி தொடர்பு:16:05 (29/01/2018)

`என் மகள், எங்கே எப்படி இறந்தாள் என்றே தெரியல' - தாய் எடுத்த விபரீத முடிவு

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் குடும்ப பிரச்னை காரணமாக மனு அளிக்க வந்த மூதாட்டி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூதாட்டி மகேஸ்வரி

கடந்த ஆண்டு இசக்கிமுத்து தன் குடும்பத்தினருடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட பின்னர், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த சோதனைக்குப் பின்னரே, பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதையும் மீறி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். குடும்ப பிரச்னை காரணமாகக் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடமும் 11 முறை மனு அளித்தும் பலன் கிடைக்காததால் ஏற்பட்ட அதிருப்தியில் தீக்குளிக்க முயன்றதாக அவர் தெரிவித்தார்.  

தீக்குளிக்க முயன்ற மகேஸ்வரி, நெல்லை மாவட்டம் மாவடிக்கால் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் இன்று அளித்த மனுவில், ’’என் மகள் தேவி கங்காவை பாலசுப்பிரமணியன் என்பவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர் கர்ப்பிணியாக இருந்த நிலையில், திருமணமான 8 மாதத்திலேயே 2016-ல் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை குறித்த எந்த தகவலும் எனக்குத் தெரியப்படுத்தவில்லை. 

என் மகளின் சந்தேக மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2017 பிப்ரவரி 27-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன். அந்த மனு தொடர்பாகக் கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் விசாரணை நடத்தினார். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. ஜூலை 27-ம் தேதி டி.எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதுபோல எஸ்.பி அலுவலகத்துக்கும் டி.எஸ்.பி அலுவலகத்துக்கும் பலமுறை மனு அளித்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகளிடம் 11 முறை மனு அளித்துவிட்டேன்.

தீக்குளிக்க முயற்சி

எனது மனுவை விசாரித்து முடித்துவிட்டதாக டி.எஸ்.பி-யிடம் நேரில் கேட்டபோது தெரிவித்தார். ஆனால், மனுவை விசாரித்து முடிக்கப்படவில்லை எனக் காவல்நிலையத்தில் தெரிவித்தனர். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவே இல்லை. டி.எஸ்.பி என்னிடம் தவறான தகவலைத் தெரிவித்துவிட்டார். பின்னர், 2017-ல் அக்டோபர் 23-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தேன். அந்த மனு ஆர்.டி.ஓ மூலமாக மீண்டும் டி.எஸ்.பி-க்கு அனுப்பப்பட்டது. அவர் என்னிடம் விசாரிக்கையில் எனது செல்போனை பிடுங்கி பரிசோதித்துப் பார்த்தார். பின்னர் என்னிடம் அவதூறாகவும் அருவருக்கத் தகுந்த வகையிலும் பேசினார். 

என் மகள், எங்கே எப்படி இறந்தாள் என்பதே தெரியவில்லை. அவரது இறப்புச் சான்றுகூட என்னிடம் கொடுக்கப்படவில்லை. அதைப் பெற்றுத் தருமாறு கேட்டதற்கும் டி.எஸ்.பி மறுத்துவிட்டார். தென்காசி நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றிருந்த நிலையிலும் அதனையும் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை என டி.எஸ்.பி கூறிவிட்டார். அதனால் அவர் விசாரித்தால் எனக்கு நீதி கிடைக்காது. அதனால் ஆட்சியரே இந்த விசயத்தை நேரில் ஆய்வுசெய்து எனக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்’’ என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், ஆட்சியர் அலுவலகத்தின் எதிரிலேயே அவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.