`ரஜினி, கமல் எப்போதுமே எங்களுக்கு எதிரிகள்தான்' - கலகலத்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ | We always oppose Rajini, Kamal's political entry says ADMK MLA

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (29/01/2018)

கடைசி தொடர்பு:18:15 (29/01/2018)

`ரஜினி, கமல் எப்போதுமே எங்களுக்கு எதிரிகள்தான்' - கலகலத்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ

“ரஜினி, கமல் இருவருமே அ.தி.மு.க-வுக்கு எதிரிகள்தான். இவர்கள் இருவரும் அரசியலில் நிலைக்க முடியாது. நிலைத்தாலும் ஜெயிக்க முடியாது. அவர்கள் கனவில்தான் அரசியல் செய்ய முடியும்" என ஸ்ரீவைகுண்டம் தொகுதி  எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதன் தெரிவித்துள்ளார். 

shanmuganathan mla pettition to rdo thoothukudi

தூத்துக்குடி சிப்காட் விரிவாக்கப் பணிகளுக்காக முன்னறிவிப்பின்றி நடத்தப்பட்ட கருத்துகேட்புக் கூட்டத்தை மீண்டும் நடத்திட வலியுறுத்தி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில்,  மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பனிடம் மனு அளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் விரிவாக்கத்துக்காக மீளவிட்டான் கிராமப் பகுதிகளில் உள்ள நிலங்களை ஆர்ஜிதம் செய்வது தொடர்பாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நடத்தப்பட்ட கருத்து கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் யாருக்கும் முறையான அழைப்பு இல்லை. எனவே, மீண்டும் இக்கூட்டத்தை நடத்திட வேண்டும்.  

இந்த சிப்காட் விரிவாக்கத்தில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தேவைக்காகத் தனியாக மின் உற்பத்தி நிலையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்காட் விரிவாக்கப் பகுதியில் அமைய உள்ள ஸ்டெர்லைட் உள்ளிட்ட எந்தக் கம்பெனியின் பயன்பாட்டுக்கும் தாமிரபரணி தண்ணீர் மற்றும் நிலத்தடி நீரை எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது" என்றவரிடம், ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்த நமது கேள்விக்கு, "ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருவதால் அ.தி.மு.க-வுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. இவர்கள் இருவரும் அ.தி.மு.க-வுக்கு எப்போதுமே எதிரிகள்தான். ரஜினி கடந்த 30 வருடமாக அரசியலுக்கு வருகிறேன் எனச் சொல்லி அவரின் ரசிகர்களை ஏமாற்றி வந்தார். அடுத்த தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாகச் சொல்லி தற்போது மக்களையும் ஏமாற்றி வருகிறார்.

shanmuganathan mla

ரஜினி, கமல் இருவருக்குமே சினிமாத்துறையில் தற்போது வாய்ப்பு இல்லை. இருவர் நடிக்கும் படங்களும் ஓடவில்லை. அதனால் அரசியலில் கால் பதிக்க நினைக்கிறார்கள். இருவரும் மக்களுக்கு இதுவரை என்ன நல்லது செய்துள்ளார்கள். இதுவரை அவர்கள் சம்பாதித்த பணத்துக்கு முறையாக அரசுக்கு வரி கட்டியுள்ளார்களா. ஆன்மிக அரசியல் எனச்சொல்லி அரசியலையும் ஆன்மிகத்தையும் ரஜினி இணைத்துப் பேசுகிறார். தான் ஓர் ஆன்மிகவாதி எனத் தன்னைக் காட்டிக்கொண்டிருந்த ரஜினி, தற்போது அரசியல்வாதியாகக் காட்டிக்கொள்ள நினைக்கிறார். ரஜினி, கமல்  இருவரும் அரசியலில் நிலைக்க முடியாது. நிலைத்தாலும் ஜெயிக்க முடியாது. இருவரும் கனவில்தான் அரசியல் செய்ய முடியும்." என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க