`திருமங்கலம் பார்முலாவையே விஞ்சிவிட்டது' - நீதிபதியை வேதனையடைய வைத்த பார் கவுன்சில் தேர்தல்

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நடைமுறைகள் திருமங்கலம் பார்முலாவையே விஞ்சிவிட்டதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கான பார் கவுன்சில் தேர்தல் வரும் மார்ச் 28-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெறும் என்றும், இறுதி வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 1-ம் தேதி வெளியிடப்படும் என்றும் இந்திய பார் கவுன்சில் அறிவித்திருந்தது. நீதிமன்றத்தின் அறிவுரையை ஏற்று இந்தத் தேர்தலை ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்தநிலையில், பார் கவுன்சில் தேர்தலை நேர்மையாக நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் பாஸ்கர மதுரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘‘பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களுக்குத் தலா 10,000 ரூபாய் வரை கொடுக்க இருப்பதாகவும் அவர்கள் ஒவ்வொருவரும் தலா 4 கோடி ரூபாய் வரை செலவு செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களது சொத்து விவரங்கள் மற்றும் தங்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்தும் தெரிவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கோரியிருந்தார். 

இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தாரணி ஆகியோர் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் தரப்பில் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், பார் கவுன்சில் தேர்தல் நடைமுறைகள் திருமங்கலம் பார்முலாவையே விஞ்சிவிட்டதாகக் கருத்துத் தெரிவித்தனர். மேலும், பார் கவுன்சில் தேர்தலில் இவ்வளவு அதிகமாகப் பணப்புழக்கம் இருப்பதைப் பார்த்துக் கொண்டு நீதிமன்றம் மௌனமாக இருக்காது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கில் எதிர் மனுதாரராக வருமான வரி புலனாய்வுக் குழுவையும் இணைக்க உத்தரவிட்டனர். அதேபோல், தேர்தல் பணப்புழக்கம் தொடர்பாக வருமானவரி புலானாய்வுக் குழு கண்காணிக்கவும் எதிர்தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி வாதிட காலஅவகாசம் அளித்தும் வழக்கின் விசாரணையை நாளைக்கு (30.1.2018) ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!